புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொலை செய்யப்பட்டாரா?: அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Author: Aarthi
30 July 2021, 5:22 pm
Quick Share

வாஷிங்டன்: புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த மோதலில் புலிட்சர் விருது பெற்ற இந்தியப் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் மோதலில் பலியாகவில்லை, பத்திரிகையாளர் எனத் தெரிந்தே கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்து உள்ளதாவது, ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் ஆப்கன் ராணுவத்தினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து செய்திகளை சேகரிக்க ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையினருடன் ஸ்பின் போல்டக் பகுதிக்கு சித்திக் சென்றுள்ளார்.

சுங்கச் சாவடிக்கு அருகே சென்றபோது தலிபான் படை தாக்குதல் நடத்தியது. அதில், ஆப்கன் படை பிரிந்து இரு வேறு திசையில் சென்றது. மீதமுள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சித்திக் பிரிந்து சென்றார். இதற்கு மத்தியில், சித்திக்கிற்கு குண்டடிபட்டது. அதிலிருந்து தப்பித்து அருகில் இருந்து மசூதிக்கு சென்ற அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மசூதிக்குள் பத்திரிகையாளர் இருப்பதாக தகவல்கள் கிடைத்த பின்பும் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் சித்திக்கை தலிபான்கள் பிடித்தபோது, அவர் உயிருடன்தான் இருந்தார். இறுதியாக, சித்திக் யார் என அறிந்துகொண்ட பின்னரே அவர் கொல்லப்பட்டார். அவரைக் காப்பாற்றவந்த ஆப்கன் பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ‘மோதல் நடந்த இடத்தில் சித்திக் இருந்தது தங்களுக்குத் தெரியாது’ என தலிபான்கள் முன்னதாக விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த செய்தியை சேகரித்த செய்தியாளர் மைக்கேல் ரூபின் கூறுகையில், சித்திக்கைத் தலிபான்கள் தாக்கியதால் அவரின் தலையில் காயம் உள்ளது. உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது என்றார். சித்திக்கைக் கொன்று அவரின் உடலை சிதைத்திருப்பது சர்வதேச போர் விதிகளுக்கு எதிரானது. பத்திரிகையாளர் என தெரிந்தும் சித்திக் கொல்லப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 335

0

0