இளைஞர்களிடம் அதிகம் பரவும் கொரோனா…! உலக சுகாதார அமைப்பு திடீர் எச்சரிக்கை
18 August 2020, 8:01 pmஜெனீவா: இளைஞர்கள் மத்தியில் அதிகளவு கொரோனா பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்ய நாடானது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டின் இந்த அறிவிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை பற்றிய ஒரு எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, இளைஞர்கள் மத்தியில் அதிகளவு கொரோனா பரவி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறி இருப்பதாவது: குறிப்பாக, 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பெரும்பாலானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதை அறியாமல் உள்ளனர்.
இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவும் விகிதமும் உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவல் மாற்றம் அடைந்துள்ளது. இந்த தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள நாடுகள் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.