கொரோனா விவகாரத்தில் சீனா இன்னும் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும்..! நிபுணர் குழு குற்றச்சாட்டு..!
19 January 2021, 9:09 pmஉலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சீனாவும் பிற நாடுகளும் கொரோனா வைரஸின் ஆரம்ப பரவலை தடுக்க எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்துள்ளது. மேலும் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் இதை விரைவில் ஒரு தொற்றுநோய் என்று அறிவித்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், லைபீரிய முன்னாள் ஜனாதிபதி எலன் ஜான்சன் சிர்லீஃப் மற்றும் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் தலைமையிலான குழு, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை சீக்கிரம் அமைப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டதாகக் கூறியுள்ளது.
“குழுவிற்கு தெளிவானது என்னவென்றால், ஜனவரி மாதத்தில் சீனாவில் உள்ள உள்ளூர் மற்றும் தேசிய சுகாதார அதிகாரிகளால் பொது சுகாதார நடவடிக்கைகள் இன்னும் பலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தான்.” என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது..
ஜனவரி பிற்பகுதியில் மற்ற நாடுகளில் வெளியான கொரோனா பரவலின் ஆதாரங்களையும் இந்த குழு மேற்கோளிட்டு, எந்தவொரு நாட்டிலும் சாத்தியமான பாதிப்பைக் கொண்ட பொது சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாக வைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் நிஜத்தில் அவ்வாறு இல்லை என்றும் கூறியுள்ளது.
“உண்மை என்னவென்றால், வளர்ந்து வரும் தொற்றுநோய்க்கான ஆதாரங்களுக்கு பதிலளிக்க மிகச்சில நாடுகள் மட்டுமே தங்களுக்குக் கிடைத்த தகவல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன.” என்று குழு கூறியது.
உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார மைப்பு ஏன் அறிவிக்கவில்லை என்றும் வல்லுநர்கள் ஆச்சரியப்பட்டனர். உலக சுகாதார அமைப்பு ஜனவரி 22 அன்று தனது அவசரக் குழுவைக் கூட்டியது.
ஆனால் ஒரு வாரம் கழித்து வளர்ந்து வரும் தொற்றுநோயை சர்வதேச அவசரநிலை என்று வகைப்படுத்தவில்லை. அந்த நேரத்தில், உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அதன் நிபுணர் குழுவிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததாக உலக சுகாதார அமைப்பு பின்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
“இன்னும் ஒரு கேள்வி என்னவென்றால், தொற்றுநோய் என்ற வார்த்தையை உலக சுகாதார அமைப்பு முதன்முறையாக பயன்படுத்திய நேரத்திற்கு சில காலம் முன்னர் பயன்படுத்தியிருந்தால் அது உதவியிருக்குமா?” என்று நிபுணர் குழு மேலும் கேள்வியெழுப்பியுள்ளது.
0
0