“வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்”..! உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதாக டிரம்ப் ஆவேசம்..!

4 November 2020, 2:32 pm
Trump_UpdateNews360 (2)
Quick Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடுவதாகக் கூறினார்.

குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடென் ஆகியோரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் தற்போது வாக்குகளின் எண்ணிக்கை நடந்து வருகிறது.

“நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம். அனைவரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதிகாலை 4 மணிக்கு அவர்கள் எந்த வாக்குச்சீட்டையும் கண்டுபிடித்து பட்டியலில் சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஏற்கனவே வென்றுள்ளோம்.” என்று டிரம்ப் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு வெள்ளை மாளிகையில் கூறினார். 

இது அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி எனக் கூறிய அவர் மேலும், தங்களின் குறிக்கோள் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகும் என்றார்.

இதற்கிடையில், பிடென் மற்றும் டிரம்ப் முக்கியமான ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட சம நிலையில் உள்ளார்கள். தற்போது வரை வெளியான முடிவுகளில் டிரம்ப் அலாஸ்கா, ஆர்கன்சாஸ், கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹோமா, தெற்கு டகோட்டா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா, வயோமிங், இந்தியானா, தென் கரோலினா மற்றும் உட்டாவை வென்றுள்ளார். 

மறுபுறம், கலிபோர்னியா, கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஒரேகான், ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் ஆகியவற்றை பிடென் கைப்பற்றியுள்ளார்.

இதற்கிடையே இருவரும் தனிப்பெரும்பான்மையை பிடிக்கும் முனைப்பில் உள்ள நிலையில், ஒருவேளை இருவருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் எனும் கேள்வி மக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?டிரம்ப் மற்றும் ஜோ பிடென் இருவருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிடில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை அதிக ஓட்டுக்களை வாங்கிய முதல் மூன்று அதிபர் வேட்பாளர்களிலிருந்து ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும். இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு வாக்கு அளிக்கப்படும். இதன் மூலம் 50 மாகாணங்களில் 26 மாகாணங்களில் வென்றவர் அதிபராவார்.

அதே போல் அமெரிக்க செனட் சபை அதிக வாக்குகளை வென்ற முதலிரண்டு வேட்பாளர்களில் இருந்து ஒருவரை துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பர். இங்கு ஒவ்வொரு செனட் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு என மொத்தமுள்ள 100 வாக்குகளில் 51 வாக்குகளை பெற்றவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

கடந்த காலத்தில் 1800 மற்றும் 1824’ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் மற்றும் 1836’ஆம் ஆண்டு துணை அதிபர் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எனினும்  தர்பூதைய சூழ்நிலையில் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவு என்றும், இருவரில் ஒருவர் தனிப்பெரும்பான்மை பெற்றுவிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 22

0

0