“யோஷிஹைட் சுகா”..! இவர் தான் ஜப்பானின் புதிய பிரதமர்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

14 September 2020, 3:04 pm
Yoshihide_Suga_UpdateNews360
Quick Share

யோஷிஹைட் சுகா இன்று ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வாகிறார்.

கடந்த மாதம் சுகாதார பிரச்சினைகள் காரணமாக ராஜினாமா செய்வதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்ததை அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்தலில் சுகா 377 வாக்குகளைப் பெற்றார்.

மற்ற இரண்டு போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் வெளியுறவு மந்திரி புமியோ கிஷிடா 89 வாக்குகளைப் பெற்றார். முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகெரு இஷிபா 68 வாக்குகளைப் பெற்றார்.

தற்போது அபேயின் அரசாங்கத்தின் தலைமை அமைச்சரவை செயலாளரான சுகாவின் வெற்றி, புதன்கிழமை பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவரது தேர்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

வடக்கு ஜப்பானின் அகிதா மாகாணத்தில் ஒரு விவசாயியின் மகனாக பிறந்த சுகா, “தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றுவதற்காக நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்” என்று தனது வெற்றி உரையில் கூறினார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் தனது முன்னுரிமைகள் என்று அவர் கூறியுள்ளார். பல்வேறு கொள்கைகள் பற்றி கேட்டபோது அபே தலைமையிலான அரசாங்கத்தை பின்பற்ற உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அபேயின் வலது கையாக அறியப்பட்ட சுகா, உண்மையில் கொள்கை ஒருங்கிணைப்பாளராக வேலைகளைச் செய்வதற்கான கடுமையான அணுகுமுறையால் அறியப்படுகிறார் மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தின் மையப்படுத்தப்பட்ட சக்தியைப் பயன்படுத்தி அதிகாரத்துவத்தை ஒருமுகப்படுத்துவதில் வல்லவர் எனக் கூறப்படுகிறது.

உள்நாட்டில் அவரது அரசியல் திறன்களுக்காக ​​சுகா அறியப்பட்டாலும் அவர் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. அவருடைய இராஜதந்திர திறன்கள் தெரியவில்லை. இருப்பினும் அவர் அபேயின் முன்னுரிமைகளைப் பின்பற்றுவார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மேலதிகமாக, கிழக்கு சீனக் கடலில் தனது உறுதியான நடவடிக்கைகளைத் தொடரும் சீனா உட்பட பல சவால்களை சுதா கையாள வேண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த கோடைகாலத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கை என்ன செய்வது என்பதையும் அவர் தீர்மானிக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் யார் வென்றாலும் அவர் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும்.

Views: - 7

0

0