“குறும்படம் எடுக்க முதலீடு எனக் கூறி மோசடி” - பணம் பறிப்பு புகாரில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி அதிரடி கைது!

1 min ago

சென்னை:

 குறும்படம் எடுக்க முதலீடு செய்யுமாறு கூறி 26 வயது இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி வெங்கட் சென்னை கிண்டி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு அந்த இளைஞர் மிரட்டப்பட்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறும்படம் பெயரில் மோசடி:

சென்னை கிண்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரிடம் அறிமுகமான பிக்பாஸ் புகழ் நடிகை வர்ஷிணி, தான் புதியதாக ஒரு குறும்படம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த இளைஞர், வர்ஷிணியிடம் ரூ.5 லட்சம் பணத்தை முதலீடாக வழங்கியுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பல நாட்களாகியும் குறும்படம் எதுவும் எடுக்கப்படாத நிலையில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்:

பணத்தை திருப்பித் தர மறுத்த வர்ஷிணி, அந்த இளைஞரை மிரட்டியதுடன் கூடுதலாக ரூ.27 லட்சம் தங்களுக்குத் தர வேண்டும் என நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கிண்டி பகுதியில் வைத்து அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் அலைபேசிகளைப் பறித்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை:

தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வர்ஷிணி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகை வர்ஷிணியை கிண்டி போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்