"சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு தளத்தில் சீமான்" - மதுரையில் களைகட்டும் படப்பிடிப்பு!

1 min ago

மதுரை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான், சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவர் தற்போது மதுரையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் சீமான் :

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raaj Kamal Films International) தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சேயோன்’. சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'சேயோன்' படத்தில் சீமான் இணைந்துள்ளதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. வெள்ளை வேட்டி, சட்டையில் கம்பீரமாக மதுரையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் மற்றும் செய்திகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சீமானின் கதாபாத்திரம் என்ன?

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்.ஐ.கே’ திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக சீமான் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது ‘சேயோன்’ திரைப்படத்திலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாகவோ அல்லது மிகவும் வலிமையானதொரு முக்கியக் கதாபாத்திரத்திலோ நடிக்கலாம் எனத் திரை வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சேயோன் - திரைக்களமும் குழுவும்:

மதுரை மண்ணின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார்.

தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் (ராஜ்கமல் ஃபிலிம்ஸ்).

இயக்கம்: சிவகுமார் முருகேசன்.

இசை: சந்தோஷ் நாராயணன்.

ஆக்‌ஷன்: அன்பறிவ்.

மற்ற நட்சத்திரங்கள்:

 ராஜ் பி ஷெட்டி, பால சரவணன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்