“பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு சிம் கார்டுகள் சப்ளை” - டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதி கைது!

20 hours ago

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ -க்கு உளவு வேலை பார்த்ததுடன், இந்திய சிம் கார்டுகளை வாங்கி அனுப்பிய இளம் தம்பதியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு  அதிரடியாகக் கைது செய்துள்ளது. தேசப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கியத் தகவல்களை இவர்கள் பகிர்ந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

யார் அந்த தம்பதி?

கைது செய்யப்பட்டவர்கள் தெற்கு டெல்லியைச் சேர்ந்த முகம்மது சாகில் (25) மற்றும் அவரது மனைவி சமீரா (21) என்பது தெரியவந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் இவர்களுக்குப் பாகிஸ்தான் ஏஜென்ட் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி இவர்களை ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் தங்களது உளவு வேலைக்காக வலையில் வீழ்த்தியுள்ளனர்.

எப்படிச் செயல்பட்டார்கள் - சிம் கார்டு கடத்தல்:

சாகில் மற்றும் சமீரா இருவரும் டெல்லியில் 8  இந்திய சிம் கார்டுகளை வாங்கி, அதனைத் துபாய் வழியாகப் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ முகவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக இவர்களுக்கு ரூ. 30,000 பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் ஊடுருவல்:

பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த இந்திய எண்களைப் பயன்படுத்தி, அங்கிருந்து வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்திய எண்கள் என்பதால் எந்தச் சந்தேகமும் இன்றி, ராணுவம் மற்றும் முக்கியப் பாதுகாப்பு அமைப்புகளின் வாட்ஸ்அப் குழுக்களில் ஊடுருவி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.

ராணுவத் தகவல்கள் சேகரிப்பு:

சிம் கார்டுகளை சப்ளை செய்தது மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை (Cantonment areas) நோட்டமிடுவதற்காகவும், ராணுவ நீதிமன்ற விசாரணை (Court-martial) எதிர்கொள்ளும் வீரர்களின் விவரங்களைச் சேகரிக்கவும் இவர்கள் பல்வேறு நபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி செய்துள்ளனர்.

சிக்கியது எப்படி?

டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் (NCR) பகுதிகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், முதலில் சாகிலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது ஸ்மார்ட்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தான் அதிகாரிகளுடனான ரகசிய உரையாடல்கள் சிக்கின. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்தே, நொய்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றி வந்த அவரது மனைவி சமீராவும் கைது செய்யப்பட்டார்.

இருவரிடமிருந்தும் உளவு வேலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பறிமுதல் செய்துள்ள டெல்லி காவல் துறையினர், இவர்களின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறியும் வகையில் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்