
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஆன்மீகப் பயணமாகச் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 3 பெண்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை என முதலமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சரின் உதவியைக் கோரியுள்ளதாக அவர் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 29) தகவல் தெரிவித்தார்.
மாயமான 3 புதுச்சேரி பெண்கள் :
நேபாளத்திற்கு ஆன்மீகச் சுற்றுலாவாகச் சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
ஆர். கீதா, அவரது மூத்த மகள் வைஷ்ணவி மற்றும் உறவினர் ஆனந்த சுந்தரி ஆகிய மூன்று பேரும் மாயமாகியுள்ளனர்.
இவர்களுடன் பயணம் செய்த மற்றவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
முதலமைச்சர் ரங்கசாமியின் துரித நடவடிக்கை:
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் என். ரங்கசாமி கூறியதாவது:
"நேபாளத்தில் மாயமாகியுள்ள நமது மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களின் தற்போதைய நிலை குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இது மிகுந்த வேதனையளிக்கிறது".
"இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாயமான புதுச்சேரிப் பெண்களைக் கண்டுபிடித்துப் பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளேன்" என்று அவர் சபையில் தெரிவித்தார்.
தொடரும் பதற்றம்
85 பேர் மாயம்:
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 85 யாத்ரீகர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரம்:
மாயமானவர்களைக் கண்டறியும் பணியில் நேபாள ராணுவமும், பேரிடர் மீட்புப் படையினரும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்தியத் தூதரக அதிகாரிகளும் நேபாள அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரிப் பெண்கள் உட்படத் தமிழர்கள் பலர் மாயமாகியுள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.