“கார் சாவியும் காமெடி சண்டையும் ரேஞ்ச் ரோவர்’ முதல் ‘அரசு பங்களா வரை” - குலுங்கிய தமிழகச் சட்டப்பேரவை!

22 Aug 26

சென்னை:

தமிழகச் சட்டப்பேரவையில் அண்மையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட 'எம்.எல்.ஏ-க்களுக்கு கார்' வழங்கும் அறிவிப்பு, ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பெரும் விவாதப் போரை உருவாக்கியுள்ளது. மக்கள் பிரச்னைகளை விவாதிக்க வேண்டிய அவை, இரு தரப்புக்கும் இடையிலான நையாண்டிகளும், வார்த்தை மோதல்களுமாக ஒரு 'காமெடி சண்டை' களமாகவே மாறிப்போனது.

கார் சாவி அறிவிப்பும் பின்னணியும்:

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் சுயமாக அறிக்கை வாசித்த முதலமைச்சர் விஜய், ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசே புதிய கார் வழங்கும் என்றும், காரைப் பராமரிக்கவும் எரிபொருளுக்காகவும் மாதம் ரூ. 75,000 மற்றும் உதவியாளர் ஊதியமாக ரூ. 25,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் மாதாந்திரப் படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய புதிய எம்.எல்.ஏ-க்கள், தங்களது தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்துப் பணியாற்றவும், செல்வந்தர்களைச் சார்ந்திருக்காமல் நேர்மையாகச் செயல்படவும் இந்தத் திட்டம் உதவும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எங்களுக்கு கார் வேண்டாம்” - திமுகவின் நிராகரிப்பு:

இந்த அறிவிப்பு வெளியானதும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாகப் பதிவு செய்தார்.அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதாக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கஜானா காலி எனச் சொல்லிவிட்டு, தற்போது கார் என்ற பெயரில் எதற்காக இந்த வீண் செலவு? விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், இந்த கார் எங்களுக்குத் தேவையில்லை. திமுகவின் 59 எம்.எல்.ஏ-க்களும் கார்களை வாங்கப் போவதில்லை,” என உதயநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவையில் அரங்கேறிய “காமெடி சண்டை”:

திமுகவின் இந்த நிராகரிப்பைத் தொடர்ந்து, அவையில் அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது:

ரேஞ்ச் ரோவர் - அரசு பங்களா:

திமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கையில் ரூ. 10,000 மட்டுமே இருப்பதாகக் கூறிவிட்டு, 'ரேஞ்ச் ரோவர்' காரில் வலம் வருபவர்கள் நாங்கள் கிடையாது. வசதி இருப்பவர்கள் காரை வாங்க வேண்டாம்; ஆனால் இல்லாதவர்களுக்கு அது தேவை,” என விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொந்தமாகப் பல வீடுகள் இருந்தும், அவர் அரசு பங்களாவில் வசிப்பதையும் சுட்டிக்காட்டினார்.

எ.வ. வேலுவின் விளக்கம்:

இதற்குப் பதிலளித்த திமுக உறுப்பினர் எ.வ. வேலு, “எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வேண்டாம் என்றுதான் சொன்னோம்; மற்ற கட்சிக்காரர்களை வாங்க வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லையே? இதைப் புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்கிறீர்கள்,” என்று கூறினார்.

மற்ற கட்சிகளின் நிலைப்பாடு:

இந்த கார் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தின. பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி பேசுகையில், தங்களது எம்.எல்.ஏ-க்களிடம் ஏற்கனவே வாகனங்கள் இருப்பதால், அரசு வழங்கும் இலவச கார் தங்களுக்குத் தேவையில்லை என அறிவித்தார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ராமச்சந்திரன், கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் அதைக் கொடுத்தால் போதும் என்று தெரிவித்தார்.

அடித்தட்டு மக்கள் வரை எம்.எல்.ஏ-க்கள் தடையின்றிப் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'கார் சாவி' வழங்கப்பட்டாலும், அது சட்டப்பேரவையில் 'பங்களா', 'ரேஞ்ச் ரோவர்', 'காலி கஜானா' என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான சுவாரஸ்யமான 'காமெடி சண்டையாக' மாறி, தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது

முக்கிய செய்திகள்