
சென்னை (ஆகஸ்ட் 19, 2026):
மக்கள் பணிகளைத் தொய்வின்றித் தொடரவும், தங்களின் தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும் எனத் முதலமைச்சர் 110-விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
வாகனம் மற்றும் வாகனப் படி (ரூ.75,000) :
மக்களாட்சியின் முக்கியத் தூண்களாக விளங்கும் மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதிக்குட்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்குத் தடையின்றிப் பயணம் செய்து களப்பணியாற்ற ஏதுவாக அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பிலேயே வாகனம் (கார்) வாங்கித் தரப்படும். மேலும், இந்த வாகனத்திற்கான ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதந்தோறும் ரூ.75,000 'வாகனப் படியாக' வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அலுவலக உதவியாளர் படி (ரூ.25,000) :
எம்.எல்.ஏ-க்களின் தினசரி அலுவலக நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதற்கும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கையாள்வதற்கும் வசதியாக, உதவியாளர் ஒருவரை அவர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியாளரின் ஊதியத்திற்காக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.25,000 'உதவியாளர் படியாக' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் பின்னணி என்ன?
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் (ஆகஸ்ட் 12), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். "தற்போது சட்டப்பேரவையில் பொருளாதார வசதி இல்லாத முதல் தலைமுறை எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்பதால் தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் மிகவும் கடினமாக உள்ளது. லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் இந்த அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் விஜய், எந்தவொரு பொருளாதாரப் பின்னணியும் இல்லாத முதல் தலைமுறை எம்.எல்.ஏ-க்கள் மக்கள் சேவையைத் தொய்வின்றிச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த அறிவிப்பை 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார்.