“சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம்” - தவெக அமைச்சர்களை ஒருமையில் பேசிய திமுக எம்.எல்.ஏ - கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

19 Aug 26

சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிலவியது. திமுக உறுப்பினர்கள் அமைச்சர்களைத் தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவையில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.

காவிரி விவகாரமும் துரோகம் என்ற வார்த்தையும்

சட்டப்பேரவையில் இன்று காலை காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், ”காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்குத் துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால், நிறைய விஷயங்கள் பேசலாம்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மூத்த திமுக உறுப்பினர் கே.என். நேரு, 'துரோகம்' என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தினார். இதையெடுத்து, சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவி சங்கர் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

முன்வரிசைக்கு வந்த திமுகவினர்:

இந்த விவாதத்தின் போது திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் கொண்டு அவையின் முன்வரிசைக்கு வந்தனர். அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர், ”சட்டப்பேரவையில் திமுகவினர் முன்வரிசைக்கு வருவதையும் நேரலையில் காண்பிக்க வேண்டும். இதனை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். இதனால் அவையில் மேலும் பரபரப்பு நிலவியது.

கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்:

திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகளால் டென்ஷன் ஆன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து ஆவேசமாகப் பேசினார். எதிர்க்கட்சியினரின் வார்த்தைகளைக் கண்டித்த அவர், ”என்ன வார்த்தை இது? பைத்தியம் மாதிரி பேசுகிறார்கள் என்று கூறுகிறார்; இதைத்தான் சட்ட அமைச்சரும் சுட்டிக்காட்டினார். ஒருமையில் பேசுவது, 'வாடா போடா' என்று பேசுவது, மரபுக்கு மாறான வார்த்தைகளைப் பேசுவது போன்றவற்றை திமுகவினர் தவிர்க்க வேண்டும்" என்று எச்சரித்தார்.

"முதல்வரின் கடைக்கண் பார்வை போதும்"

தொடர்ந்து பேசிய அவர், தங்கள் கட்சி உறுப்பினர்களின் ஒழுக்கத்தைக் குறிப்பிட்டு, ”தவெகவினரைக் கட்டுப்படுத்துவதற்கு எங்கள் முதல்வர் விஜய்யின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே போதும். ஆனால், திமுக உறுப்பினர் அடிக்கக் கை ஓங்குகிறார்; பாய்ந்து வருகிறார்" என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அமைச்சர் ராஜ்மோகனின் இந்த ஆக்ரோஷமான பேச்சும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான இந்த நேரடி மோதலும் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள்