
சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினர் மீதும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியது பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளையும், முதல்வரின் குற்றச்சாட்டுகளையும் கடுமையாகச் சாடினார்.
”சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?”
பேரவையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் பதில்கள் குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், ”நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்குப் பதில் தருகிறார்கள். இப்போது அவையில் பாட்டு எல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்றே சந்தேகம் வருகிறது” என்று கேலியாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஆளுங்கட்சியினர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், எதிர்கட்சிகளை விட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையே சபாநாயகர் அதிகமாக அவைக்குறிப்பிலிருந்து நீக்கி வரலாறு படைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும், அந்தப் பேச்சுகள் அனைத்தும் ‘ரீல்ஸ்’ மூலமாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதால், நீக்குவதே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோசியக்காரர் சொன்னால்தான் பார்ப்பாரா? – '3 ஃபைல்ஸ்' சவால்!
முன்னதாக, பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அவை முந்தைய திமுக அரசின் முறைகேடுகளைக் குறிக்கும் வகையில் உள்ளதாகவும் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய உதயநிதி, ”முதலமைச்சர் தன்னுடைய மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகத் திமுக அரசைக் குற்றம் சாட்டும் வகையில் பேசினார். அந்த கோப்புகளை அவர் முதலில் திறந்து பார்க்க வேண்டும். எதற்காகப் பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னால்தான் முதலமைச்சர் அதைப் பார்ப்பாரா?” என்று சவால் விடுத்தார். மேலும், ”ஆதாரம் இருந்தால் யார் மீது தவறு இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.
த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி:
உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தரப்பிலிருந்து உடனடியாகப் பதிலடி கொடுக்கப்பட்டது.
பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவையே தோற்கடித்துத் தான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
மேலும், அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், தவறுகள் நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் உறுதியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கும், ஆளுங்கட்சித் தரப்பிற்கும் இடையே நடந்த இந்த நேருக்கு நேர் விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.