
சென்னை:
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை மூடிமறைக்க பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும், ஏடிஜிபியுமான அருண் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிரவைக்கும் போக்சோ வழக்கு;
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மீது அடுத்தடுத்து 6 போக்சோ வழக்குகள் பாய்ந்துள்ளன. சிறுமிகளை இடைத்தரகர்கள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொகுசு பங்களாவிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த கொடூரங்கள் அடங்கிய 16 ஜிபி (16GB) பென் டிரைவ் ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அண்மையில் 2004-ஆம் ஆண்டு சிறுமி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய புதிய வழக்கிலும் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு:
இந்த விவகாரம் தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்டும், சென்னை காவல்துறையின் உயர் அதிகாரிகள் செல்வாக்கு மிக்க தொழிலதிபருக்குச் சாதகமாகச் செயல்பட்டு பல மாதங்களாக வழக்குப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, வழக்கை மூடிமறைக்கவும் தாமதப்படுத்தவும் சுமார் ₹40 கோடி முதல் ₹70 கோடி வரை லஞ்சப் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
எஸ்.ஐ.டி விசாரணை வளையத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்:
விவகாரம் ஊடகங்களில் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. முன்னாள் சென்னை காவல் ஆணையரான ஏடிஜிபி அருண் மற்றும் கூடுதல் ஆணையரான ஐஜி கண்ணன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 'காத்திருப்போர் பட்டியலில்' வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி தேன்மொழி தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், வழக்கை தாமதப்படுத்தியதற்கான காரணங்கள் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது எஸ்.ஐ.டி வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அருணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை:
முன்னாள் காவல் ஆணையர் அருணிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் போக்சோ வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதேபோல, கூடுதல் ஆணையர்கள் ராதிகா, கண்ணன் மற்றும் வனிதா ஆகியோரிடமும் பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார்கள் வந்தவுடன் உடனடியாக FIR பதிவு செய்யப்படாதது ஏன்? இடைத்தரகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏதேனும் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் SIT விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பெண் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய SIT குழு, இந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விரிவான அறிக்கையைத் தயாரிக்க உள்ளது. லஞ்சப் புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகளுக்கும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக காவல்துறையின் உச்ச பதவிகளில் இருந்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருப்பது அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.