
2027-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை தினங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி, அரசு ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசுப் பொது விடுமுறைகளாக அமைகின்றன. ஆனால், இதில் பல முக்கியப் பண்டிகைகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், கூடுதலாக கிடைக்க வேண்டிய விடுமுறைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
வார இறுதி நாட்களில் முடங்கும் 8 விடுமுறைகள்:
பொதுவாக அரசு விடுமுறைகள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வந்தால், சனி மற்றும் ஞாயிறோடு சேர்த்து தொடர் விடுமுறையாக (Long Weekend) கொண்டாடுவது வழக்கம். ஆனால், 2027-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 23 விடுமுறை நாட்களில், 6 நாட்கள் சனிக்கிழமைகளிலும், 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றன.
இதனால், வழக்கமாகவே சனி மற்றும் ஞாயிறுகளில் வார விடுமுறை பெறும் ஐடி ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு, இந்த 8 நாட்களுக்கான கூடுதல் விடுமுறை வாய்ப்பு இல்லாமல் போகிறது.
சனிக்கிழமையில் வரும் 6 விடுமுறைகள்:
திருவள்ளுவர் தினம் (ஜனவரி 16), உழைப்பாளர் தினம் (மே 1), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 4), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 9), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25).
ஞாயிற்றுக்கிழமையில் வரும் 2 விடுமுறைகள்:
உழவர் திருநாள் (ஜனவரி 17) மற்றும் ஆகஸ்ட் 15.
ஆகஸ்ட் 15-ல் நிகழ்ந்த அபூர்வ சேர்க்கை (சுதந்திர தினம் & மிலாது நபி)
2027-ம் ஆண்டின் விடுமுறைப் பட்டியலில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சம் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆகும். இந்தியாவின் 81-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று, இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாது நபியும் ஒரே நாளில் வருகிறது.
இரண்டு பெரும் அரசுப் பொது விடுமுறைகள் ஒரே தேதியில் வருவதோடு மட்டுமில்லாமல், அந்த நாளும் ஒரு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டது. இதனால், ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய இரண்டு வெவ்வேறு பொது விடுமுறை நாட்கள், ஒரே ஞாயிற்றுக்கிழமையில் முடிந்துவிடுகிறது.
ஆறுதல் தரும் சில தொடர் விடுமுறைகள்:
சனி, ஞாயிறுகளில் அதிக விடுமுறைகள் சென்றாலும், 2027-ல் பயணம் மற்றும் கொண்டாட்டங்களைத் திட்டமிடுவோருக்குச் சில மகிழ்ச்சியான செய்திகளும் உள்ளன. சில முக்கியப் பண்டிகைகள் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு: ஜனவரி 1 (வெள்ளிக்கிழமை)
பொங்கல் பண்டிகை:
ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை) - இதைத் தொடர்ந்து சனி (திருவள்ளுவர் தினம்), ஞாயிறு (உழவர் திருநாள்) வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை உறுதி.
புனித வெள்ளி:மார்ச் 26 (வெள்ளிக்கிழமை) தீபாவளி:
அக்டோபர் 29 (வெள்ளிக்கிழமை) - தீபாவளிக்கு அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.
மற்ற முக்கிய விடுமுறை நாட்கள் எப்போது?
குடியரசு தினம் - ஜனவரி 26 (செவ்வாய்க்கிழமை)
ரம்ஜான் - மார்ச் 10 (புதன்கிழமை)
தமிழ்ப் புத்தாண்டு - ஏப்ரல் 14 (புதன்கிழமை)
பக்ரீத் - மே 17 (திங்கட்கிழமை)
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2027-ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும், 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வந்துவிடுவதாலும், ஆகஸ்ட் 15 அன்று இரட்டை விடுமுறை இணைந்து வருவதாலும், நிகர விடுமுறை நாட்கள் குறைவாகவே உள்ளன. எனினும், வெள்ளிக்கிழமைகளில் வரும் பண்டிகைகளைக் கொண்டு மக்கள் தங்களது விடுமுறைத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள முடியும்.