“சோனியா காந்திக்கு எதிரான வாக்காளர் பட்டியல் மோசடிப் புகார்” - கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி நீதிமன்றம்!

1 min ago

புதுடெல்லி:

இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்த்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த கீழமை (நடுவர்) நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

வழக்கின் பின்னணி:

 சோனியா காந்தி 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ஆனால், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது 1980-ஆம் ஆண்டிலேயே புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இது நடைபெற்றிருக்கலாம் என்பதால், சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கீழமை நீதிமன்றத்தின் நிராகரிப்பு:

இந்த மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி 2025 செப்டம்பர் 11-ஆம் தேதி வழக்கை விசாரிப்பதற்கே மறுத்துத் தள்ளுபடி செய்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு:

கீழமை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, கீழமை நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான தகுந்த காரணங்கள் ஏதும் விளக்கப்படவில்லை

வழக்கின் தன்மை குறித்துக் காவல்துறையிடம் எந்தவொரு நிலை அறிக்கையையும்  கோராமல், காவல் அதிகாரியின் வாதங்களைக் கேட்காமல் அவசரகதியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சட்டப்படி தவறானது.

மீண்டும் விசாரணைக்கு உத்தரவு:

 இதனையடுத்து, இந்த விவகாரத்தை மீண்டும் பழையபடி நடுவர் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பிய நீதிபதி விஷால் கோக்னே, "வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் நிலை அறிக்கையைப் பெற்று, இருதரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட பின்னரே தெளிவான காரணங்களுடன் கூடிய புதிய உத்தரவை நடுவர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவால், பல ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முக்கிய செய்திகள்