"சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்" - அண்ணா அறிவாலயத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அவசர ஆலோசனை!

1 min ago

சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று சபை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் நடந்தது என்ன?

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (செப்டம்பர் 8) பெரும் பரபரப்பு நிலவியது. நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் நேற்றே கடும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபாநாயகர் இருக்கை முற்றுகையும் வெளியேற்றமும்:

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் திமுக கொறடா எ.வ.வேலு இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். "சர்க்காரியா மற்றும் அமலாக்கத்துறை அறிக்கைகள் குறித்து முதலமைச்சர் பேரவையில் பேசியது சபை விதிகளுக்கு முரணானது" என அவர் வாதிட்டார். மேலும், முதலமைச்சரின் நேற்றைய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அரசின் சார்பில் பதிலளித்தனர். முதலமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவையில் தொடர்ந்து அமளி நீடித்ததையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் சபாநாயகருக்குப் பரிந்துரைத்தார்.

சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக்குள் நுழைந்த சபைக்காவலர்கள், எம்.எல்.ஏ ஆஸ்டின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாகவும் வலுக்கட்டாயமாகவும் வெளியேற்றினர்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு:

சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்கிருந்து நேரடியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றனர். அங்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கினர்.

சட்டமன்றத்தில் தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அவை மரபுகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர். ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும், மக்கள் மன்றத்தில் இந்த விவகாரத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்தும் மு.க.ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ-க்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்