"அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: 5 மாதங்களாக வேடிக்கை பார்க்கும் தவெக அரசு" - டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

4 hours ago

சென்னை:

அரிசி உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பண்டங்களின் தொடர் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக இதனைத் துளியும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தாறுமாறாக உயரும் அத்தியாவசியப் பொருட்கள் விலை:

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் சாமானிய மக்களின் சிரமங்கள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், அடித்தட்டு மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலையும் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சில்லறை மற்றும் மொத்த விற்பனை அங்காடிகளில் அனைத்து வகையான அரிசி வகைகளின் விலையும் கிலோவுக்கு கணிசமாக உயர்ந்துள்ளதால், மாத சம்பளக்காரர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

5 மாதங்களாக வேடிக்கை பார்க்கும் தவெக அரசு:

புதிய அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆளும் அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது.

சந்தையில் நிலவும் செயற்கையான விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ, பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவோ அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. மக்கள் விலைவாசி உயர்வால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது, அதனை 5 மாதங்களாகத் தவெக அரசு வேடிக்கை மட்டுமே பார்த்து வருவது அதன் நிர்வாகத் திறமையின்மையையும் மக்கள் மீதான அக்கறையின்மையையுமே அப்பட்டமாகக் காட்டுகிறது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:

சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அரசு உடனடியாகத் தலையிட்டுத் திறந்தவெளிச் சந்தையில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

சந்தைக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், பொதுமக்களின் கடுமையான கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளும் தவெக அரசு ஆளாக நேரிடும் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகள்