“விமானத்துக்குள்ளேயே நுழைந்த டெல்லி போலீஸ் சி.ஜே.பி  நிறுவனர் அபிஜீத் தீப்கே அதிரடி கைது - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தால் பரபரப்பு!

1 min ago

புதுடெல்லி:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியும் டெல்லியில் இன்று மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காக்ரோச் ஜனதா கட்சியின்  நிறுவனர் அபிஜீத் தீப்கே டெல்லி விமான நிலையத்திலேயே விமானத்திற்குள் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் அரங்கேறிய பரபரப்பு:

இன்று காலை ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி காவல்துறையினர் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்தனர். அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த அபிஜீத் தீப்கே மற்றும் அவருடன் பயணம் செய்த சி.ஜே.பி அமைப்பின் மற்ற தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபிஜீத் தீப்கே, "நான் கைதாவதற்காகவே இங்கு வந்துள்ளேன்; என்னைக் கைது செய்யுங்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த போலீசார், "இல்லை, இது கைது அல்ல. தயவுசெய்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" எனத் தெரிவித்து அவர்களை விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். அவர்கள் மூவரும் விமான நிலையத்திற்குள்ளேயே ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உடன் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

"நான் கைதானாலும் போராட்டம் தொடர வேண்டும்" - முன்கூட்டியே எச்சரித்த தீப்கே:

டெல்லி வருவதற்கு முன்பாகவே, தனது கைதை எதிர்பார்த்து அபிஜீத் தீப்கே நேற்றிரவு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், "சனிக்கிழமை காலை நான் டெல்லி வருகிறேன். அதன்பிறகு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. அரசு என் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையோ அல்லது சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தையோ  பிரயோகிக்கலாம். என்னைக் கைது செய்வது குறித்து நான் அஞ்சவில்லை. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாம் போராடுகிறோம். அது SIR நடவடிக்கையைத் திரும்பப் பெறாமலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாமலும் ஒருபோதும் நடைபெறாது. நான் கைது செய்யப்பட்டாலும் இந்தப் போராட்டத்தை நிறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இது இந்தியாவின் அரசியலமைப்புக்கான அமைதிப் போராட்டம்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

டெல்லியில் உச்சக்கட்ட முடக்கமும் அடுத்தடுத்த கைதுகளும்:

ECINET முறைகேடு புகார்கள் மற்றும் SIR விவகாரத்தை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு டெல்லி ஜந்தர் மந்தரில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் டெல்லியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட போக்குவரத்து:

போராட்டக்காரர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் டெல்லி நோக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இணையச் சேவை துண்டிப்பு:

 ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தரில் கைது:

தடையை மீறி ஜந்தர் மந்தர் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதியில் கூடிய போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாகக் கைது செய்யப்பட்டுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு வருகின்றனர்.

முக்கியத் தலைவர்கள் சிறைபிடிப்பு:

விமானத்தில் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த பல்வேறு முக்கியத் தலைவர்களும் அடுத்தடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், பிரபல சமூக வலைதள செயல்பாட்டாளர் துருவ் ராட்டி (குருகிராமில் வைத்தும்) மற்றும் CJP அமைப்பின் கொள்கைப்பிரிவுத் தலைவர் மெஹர் உள்ளிட்ட பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு:

டெல்லியில் போராட்டக்காரர்களை முடக்கும் நோக்கில் ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி காவல்துறை இந்த முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைதி வழியிலான போராட்டத்தைக் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில் தற்போது உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

முக்கிய செய்திகள்