
கோவை:
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த 13 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே மூடியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டி மற்றும் நஞ்சுண்டாபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இயங்கி வரும் 33 தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான விரிவான நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விதிமீறல்களும் மூடப்பட்ட 13 விடுதிகளும்:
நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர் ஆனைக்கட்டி பகுதிகளில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட 13 விடுதிகளுக்கும் DTCP அல்லது உள்ளாட்சி அமைப்பின் முறையான அனுமதி, வனத்துறையின் தடையின்மைச் சான்றிதழ் மற்றும் முறையான கட்டட அனுமதி ஆகியவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உரிமையாளர்களால் தாமாகவே மூடப்பட்ட 13 விடுதிகளின் விவரம்:
ஆனைக்கட்டி ஹில் வியூ காட்டேஜஸ்
பாரத் ஹாலிடேஸ் ரிசார்ட்
கார்னிச் இன் ரிசார்ட்
டால்பின் ரிசார்ட்
ஃபயர்ஃபிளை ஃபார்ம் ஹவுஸ்
ஜிமேக்ஸ் ஹில் வியூ ஃபார்ம் ஹவுஸ்
கே.கே. செல்ஃபி பாயிண்ட் ரிசார்ட்ஸ்
மதுரம் காட்டேஜ்
ஹில்ஸ் & வேலிஸ் ஃபார்ம் ஹவுஸ்
ஜி மேக்ஸ்
காற்று ஃபார்ம் ஸ்டே
கொண்டனூர் பகுதியில் இயங்கி வந்த பெயரிடப்படாத மேலும் 2 காட்டேஜ்கள்
மேலும் 12 விடுதிகளுக்கு இறுதி நோட்டீஸ்:
திட்ட வரைபட விதிமீறல்களில் ஈடுபட்ட மேலும் 12 விடுதிகளை மூடுவதற்கான நடவடிக்கையாக, அதிகாரிகள் குழு அவற்றிற்கு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்:
ஆரா ஜங்கிள் ரிசார்ட்
ப்ளூ ஹில்ஸ் கிளப்
வைல்ட் வுட்ஸ் ரிசார்ட் (தற்போது ப்ளூ ஹில்ஸ் கிளப் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது)
ப்ரூஸ் 43 ரெஸ்டோ & கஃபே
எலிஃபென்ட் கன்ட்ரி ஃபார்ம் ஸ்டே
ஃபைவ் ஸ்டார் கார்டன் ரெஸ்டாரன்ட்
சர்வ ஃபார்ம் ஹவுஸ் (தற்போது ஃபார்ம் ரெட்ரீட் என இயங்குகிறது)
சிகரா ஃபார்ம் ரெட்ரீட்
எஸ்.ஆர். ஹேப்பி வேலி ஃபார்ம்ஸ்
எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட்
எஸ்.ஆர். எம்.டி. காட்டேஜ்
சஃபாரி ஃபார்ம்ஸ் ரிசார்ட் & லெஷர்
யானைகள் வழித்தடமும் மனுதாரரின் கோரிக்கையும்:
அதே வீரபாண்டி கிராமப் பகுதியில் முறையான அரசு அனுமதிகளுடன் 3 தங்கும் விடுதிகள், 5 குடியிருப்பு வீடுகள் மற்றும் காலி மனைகள் இயங்கி வருவதாக ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 18 அன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அனைத்துத் துறை அதிகாரிகளும் விதிமீறல்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுதாரரான எஸ்.முரளிதரன் தெரிவிக்கையில், காட்டு யானைகள் வனப்பகுதியில் அச்சமின்றி தடையின்றி நடமாடுவதை உறுதி செய்யும் வகையில், இந்த விடுதிகளைச் சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து முள்வேலிகளும் முழுமையாக அகற்றப்படும் எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.