“சி.ஜே.பி -க்கு பா.ஜ.க. இலவச விளம்பரம் தேடித்தருகிறதா” - மத்திய அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!

1 min ago

டெல்லியில் நடைபெற்று வரும் சி.ஜே.பி அமைப்பினரின் போராட்டத்தை மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் கையாண்ட விதம் குறித்து, 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான கே. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“சி.ஜே.பி அமைப்பை பாஜக எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவச விளம்பரம் தேடித்தருகிறதா?” என்று அவர் முன்வைத்துள்ள விமர்சனம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பின்னணி:

டெல்லியில் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் சி.ஜே.பி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பலரது பிணை உத்தரவாதங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றது. அதன் பிறகே சிறப்பு நிர்வாக நீதிபதியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் இந்த நடவடிக்கையை முன்வைத்து, மத்திய அரசுக்கு அண்ணாமலை 5 முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அண்ணாமலையின் முக்கியக் கேள்விகளும் விமர்சனங்களும்:

இலவச விளம்பரமா?

 பாஜக உண்மையிலேயே சி.ஜே.பி-யை எதிர்க்கிறதா? அல்லது அந்த கட்சிக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, "சி.ஜே.பி-யை ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக நினைக்கிறதா?" என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

காசு கொடுத்தால்கூட கிடைக்காது:

சி.ஜே.பி-க்குக் கிடைத்து வரும் கவனம் குறித்துப் பேசிய அவர், "இப்படியே போனால் சி.ஜே.பி கட்சியினரே காசு கொடுத்து ஒரு விளம்பரக் குழுவை வைத்திருந்தால்கூட, பாஜகவை விட இவ்வளவு சிறப்பாக அவர்களுக்கு விளம்பரம் செய்திருக்க முடியாது" எனக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

தசரா கொண்டாட்டமும் கரப்பான் பூச்சி எரிப்பும்:

சமீபத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ அசோக் கோயல் தலைமையில் 'கரப்பான் பூச்சி' உருவப்பொம்மை எரிக்கப்பட்டதை அண்ணாமலை சுட்டிக்காட்டினார். "தேசிய அளவில் இவர்களுக்கு இந்த இலவச விளம்பரத்தை வழங்குவது யார் என்று நான் தேடியபோது, அதில் பாஜக எம்.எல்.ஏ ஈடுபட்டிருந்தது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திசைதிருப்பும் வாதங்கள் வேண்டாம்:

முன்பு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஆதரித்துப் பேசியது முற்றிலும் சரியானது எனச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, "ஆனால் இன்றோ ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படுகிறார்; அமைதியான போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மக்களில் சிலருக்கு இந்தக் கேள்விகள் அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் இதைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு மத்திய அரசும் 'வாட்அபௌட்டிசம்' மற்றவர்களைப் பற்றித் திருப்பித் தாக்குவது அல்லது திசைதிருப்பும் அரசியல் வாதங்கள்) செய்வதைத் தவிர்த்துவிட்டு, நியாயமாகப் பதிலளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

தேசவிரோத முத்திரை:

போராட்டக்காரர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தப்படுவதற்கும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "எதற்கெடுத்தாலும் தேசவிரோத முத்திரை குத்துவது போதும். வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எதிரிகளுடன் கூட்டு சேரும் எந்தவொரு குடிமகனையும் கண்காணிக்கப் போதுமான ஆட்கள் இந்தியத் தூதரகங்களில் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது அதே கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், மத்திய அரசின் அணுகுமுறை குறித்தும் நேரடியாகக் கேள்விகள் எழுப்பியிருப்பது தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்