
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டு திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஆபாச நடனங்களுக்கும் காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையிலும், சின்னத்திரை நடிகைகள் பலர் வீதியில் இறங்கி உற்சாகமாக நடனமாடிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
காவல்துறையின் அதிரடித் தடையும் கட்டுப்பாடுகளும்:
குலசை தசரா என்றாலே விதவிதமான வேடமணிந்து வரும் பக்தர்களும், இரவு முழுவதும் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும்தான் பிரபலம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் திருவிழாவின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனங்கள் ஆடப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் ஆபாச நடனங்கள் ஆடவோ, சினிமா பாடல்களை ஒலிக்கவிடவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதால், இந்த ஆண்டு தசரா திருவிழாவில் நடன நிகழ்ச்சிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
வீதியில் இறங்கி ஆட்டம் போட்ட சீரியல் நடிகைகள்:
காவல்துறையின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், "குலவைன்னா பெண்கள் இருக்கனும்... குலசை தசரான்னா எங்களோட ஆட்டம் இருக்கனும்" என்று முழங்கியபடி ஏராளமான சின்னத்திரை (சீரியல்) நடிகைகளும், நடனக் கலைஞர்களும் வீதிகளில் இறங்கி உற்சாகமாக நடனமாடினர்.
ஆபாச நடனங்களுக்கு மட்டுமே தடை என்பதால், கலைஞர்கள் தங்களின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனத் திறமைகளை வெளிப்படுத்தி முத்தாரம்மனுக்குத் தங்கள் காணிக்கையைச் செலுத்தினர். பல இடங்களில் சீரியல் நடிகைகள் ஆடிய உற்சாக நடனங்கள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இது வெறும் நடனம் அல்ல முத்தாரம்மனிடம் வைத்த வேண்டுதல்:
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு இது வெறும் மேடை நடனம் அல்ல; முத்தாரம்மன் மீதான நம்பிக்கையும் வேண்டுதலும் ஆகும். இது குறித்துத் திருவிழாவில் நடனமாடிய சீரியல் நடிகை ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறுகையில்,
"முதன்முதலில் இங்கு வந்தபோது, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று முத்தாரம்மனிடம் வேண்டிக்கொண்டேன். அதன் பிறகு, இந்த வருஷம் தசரா நிகழ்ச்சியில் நடனமாட ஒப்பந்தமான அடுத்த நாளே எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துவிட்டது" எனத் தனது உருக்கமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
குலசையில் ஆடிப் பிரபலமான நட்சத்திரங்கள்;
குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் நடனமாடி, அம்மன் அருளால் திரையுலகில் பெரிய இடத்தைப் பிடித்தவர்கள் பலர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மைனா நந்தினி, ஆல்யா மானசா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களின் ஆரம்பக் காலங்களில் குலசை தசராவில் நடனமாடியவர்கள்தான்.
இப்படிப் பல கலைஞர்களுக்குக் குலசை தசரா தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடையாகவும், திரையுலகில் நுழைவதற்கான வாசலாகவும் இருந்துள்ளது.
இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், சின்னத்திரை நடிகைகள் குலசை வீதிகளில் இறங்கி ஆடிய நடனமும், அவர்கள் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான அனுபவங்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.