
பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைமைப் பொறுப்பில் (முதலமைச்சர் மற்றும் பிரதமர்) தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் ஒரு மாத கால மெகா மக்கள் சேவை மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
25 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி :
நரேந்திர மோடி, கடந்த அக்டோபர் 7, 2001 அன்று குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து பல முறை குஜராத் முதல்வராகவும், தற்போது இந்தியாவின் பிரதமராகவும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றி வருகிறார். வரும் 2026 அக்டோபர் 7-ஆம் தேதியுடன் அவர் அரசுத் தலைமைப் பதவியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ஒரு பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு தலைவர் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அரசியலமைப்பு ரீதியான உயர் பதவியில் இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:
பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு இந்த இயக்கம் நாடு முழுவதும் 13 பிரம்மாண்ட திட்டங்களுடன் நடைபெறவுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
சேவா திவஸ் & ஆசிர்வாத் கா தியா:
செப்டம்பர் 17 அன்று பிரதமரின் பிறந்தநாளை 'சேவா தினமாக' கடைப்பிடித்து, நாடு முழுவதும் மெகா ரத்த தான முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம் மாலை, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்கள் தங்கள் வீடுகளில் நன்றி தெரிவிக்கும் விதமாக 'ஆசிர்வாத் கா தியா' என்ற பெயரில் தீபம் ஏற்றுவார்கள்.
பிறந்த மண் முதல் கர்ம பூமி வரை யாத்திரை:
மோடியின் பிறந்த ஊரான குஜராத்தின் வத்நகர் முதல் அவரது நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி வரை, இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இருசக்கர வாகன யாத்திரை நடைபெறும். வத்நகரின் புனித நீர் வாரணாசிக்கும், காசியின் கங்கை நீர் வத்நகருக்கும் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்.
இன்ஃப்ளூயன்சர்கள் யாத்திரை:
மோடியின் ஆட்சிக் காலத்தில் மாபெரும் வளர்ச்சியைக் கண்ட குஜராத்தின் கிஃப்ட் சிட்டி, சத்தீஸ்கரின் பஸ்தார் உள்ளிட்ட 50 முக்கிய இடங்களுக்கு யூடியூபர்கள், பதிவர்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர்களை நேரடியாக அழைத்துச் சென்று கள நிலவரத்தை சமூக வலைதளங்களில் கொண்டு சேர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்படும்.
அக்டோபர் 7 - மெகா பேரணிகள்:
25 ஆண்டுகள் நிறைவடையும் அக்டோபர் 7-ஆம் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 'சேவா ஜோதி கலச யாத்திரை' பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள் நடைபெறும். அத்துடன் 1,000 இடங்களில் 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' க்கான உறுதிமொழி ஏற்கப்படும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாடு:
பள்ளிகளில் 'சப்னோ கா பாரத்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.
இளைஞர்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்காக 'சேவா ஃபர்ஸ்ட் இன்னோவேஷன் சேலஞ்ச்' நடத்தப்பட்டு, சிறந்த படைப்பாளர்களுக்கு தேசிய அளவிலான விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
'சேவா கி கஹானி' என்ற திட்டத்தின் கீழ், அரசின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்க்கை எப்படி மேம்பட்டது என்பதை பயனாளிகள் நேரில் பகிரும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
"மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது; இன்று அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியுள்ளதுடன், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்" என்ற செய்தியை இந்த ஒரு மாத காலப் பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது.