“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பதவியை ராஜினாமா செய்யவும் தயார்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு!

11 hours ago

புதுச்சேரிக்கு நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் ‘மாநில அந்தஸ்து’ கிடைக்குமானால், அதற்காகத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று (ஆகஸ்ட் 28) சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான அதிகாரம் இல்லாததால் நிர்வாக ரீதியில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி அவர் ஆற்றிய உரை, புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் எழுந்த விவாதம்:

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, மாநில அந்தஸ்து வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நசீம் கேள்வி எழுப்பினார். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜான் குமார் உள்ளிட்டோர் புதுச்சேரிக்கு குறைந்தபட்சம் 'சிறப்பு அந்தஸ்து' வழங்கப்பட வேண்டும் என விவாதத்தில் பேசினர்.

முதலமைச்சர் ரங்கசாமியின் பரபரப்பு பதிலுரை:

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் என். ரங்கசாமி, மாநில அந்தஸ்து கோரிக்கையை வலுவாக ஆதரித்துப் பேசினார். அவர் கூறியதாவது:

அதிகாரமில்லாத அரசு:

 "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் அந்த மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற முடியும். யூனியன் பிரதேசமாகத் தொடர்வதால், அரசுக்கும் சட்டசபைக்கும் போதிய அதிகாரம் இல்லாமல் நாங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம்."

ராஜினாமாவுக்குத் தயார்:

"மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமாயின், அதற்காக என்னுடைய பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயார்."

பிரதமரிடம் வலியுறுத்தல்:

"பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்திருந்தபோது கூட, மாநில அந்தஸ்து குறித்து அவரிடம் நேரில் வலியுறுத்தினேன். அதிகாரங்கள் இல்லாமல் அரசு தொடர்வது எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்."

டெல்லிப் பயணம்:

 "நமது மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து டெல்லி சென்று மத்திய அரசிடம் முறையிடுவோம்."

மாநில அந்தஸ்தின் அவசியம் என்ன?

புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால், பல முக்கிய முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநரின்  ஒப்புதல் அவசியமாகிறது. இதனைச் சுட்டிக்காட்டிய ரங்கசாமி, "கடந்த ஆட்சியில், ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதிப்படுத்திவிட்டனர். இதனால், நலத்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதிலும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதிலும் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இதற்கு மாநில அந்தஸ்து பெறுவது மட்டுமே ஒரே தீர்வு" என ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்