
சென்னை:
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டே வீடியோ ஆதாரம் கிடைத்தும் வீரமணியைக் கைது செய்யாமல் வழக்கை முடிக்கத் துணைபோன உயர் அதிகாரிகள் குறித்த விசாரணையும், பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வழக்கை முடிக்க நடந்த சதி:
பாதிக்கப்பட்ட சிறுமியைக் கண்டுபிடித்து வாக்குமூலம் பெற எவ்விதத் தீவிர முயற்சியும் எடுக்காத அப்போதைய காவல் துறையினர், வழக்கை முற்றிலுமாக மூடிமறைக்கச் சதி செய்தனர்.
கடந்த பிப்ரவரி 2026-ல் சிறப்புப் போக்சோ நீதிமன்றத்தில் 'வழக்கு முடிப்பு அறிக்கை' தாக்கல் செய்த விபச்சாரத் தடுப்புப் பிரிவு (போலீசார், 'பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை, போதிய ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி வீரமணியைக் காப்பாற்றும் நோக்கில் வழக்கை முடிக்கப் பார்த்தனர்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் போக்சோ நீதிமன்றம், "பக்காவான வீடியோ ஆதாரம் இருந்தும் எப்படி உங்களால் குற்றத்தை உறுதி செய்ய முடியவில்லை?" எனக் கடும் கண்டனம் தெரிவித்துக் காவல்துறையின் அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 19, 2026 அன்று ஏற்க மறுத்தது. மேலும், வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, வேறு வழியின்றி வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ ஆதாரம் கிடைத்தும் மூடிமறைக்கப்பட்ட வழக்கு:
கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோ அடங்கிய பென் டிரைவ் ஆதாரத்துடன் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது தாங்கள் இல்லை என வீரமணியும், அவருடன் கைதான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோரும் கூறியதை அப்போதைய காவல்துறை அதிகாரிகள் அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
கோடிக்கணக்கில் கைமாறிய லஞ்சம்:
டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தும், பல மாதங்களாக இந்த வழக்கைக் கிடப்பில் போட்டு வீரமணியைக் காப்பாற்றியதன் பின்னணியில், பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாகக் கைமாறியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதற்காக, முந்தைய காலகட்டத்தில் பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், சில செல்வாக்கு மிக்க நபர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் அதிகாரிகள்:
இந்த நிலையில், 2025-ல் வழக்கை நீர்த்துப்போகச் செய்த விபச்சாரத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளையும், அவர்களுக்கு உத்தரவிட்ட அப்போதைய காவல் துறை உயர் அதிகாரிகளையும் கண்டறியும் பணிகளைத் தற்போதைய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரடியாகத் தொடர்புடைய குற்றவாளிகளை மட்டுமின்றி, இவ்வளவு பெரிய கொடூரத்தை மூடிமறைக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.