
ரோம்:
இத்தாலியப் பள்ளிகளில் மாணவிகள் முகத்தை முழுவதுமாக மூடும் புர்கா மற்றும் நிகாப் போன்ற உடைகளை அணிவதற்குத் தடை விதிப்பது மற்றும் ஒவ்வொரு வகுப்பறையிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட புதிய நடவடிக்கைகளை இத்தாலி அரசு முன்மொழிந்துள்ளது.
ரோமில் நடைபெற்ற ஆளும் 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த அதிரடி அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
புதிய முன்மொழிவின் முக்கிய அம்சங்கள் - புர்கா மற்றும் நிகாப்புக்குத் தடை:
பள்ளிகளில் மாணவிகள் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் புர்கா மற்றும் நிகாப் அணியத் தடை விதிக்கப்படும். (இருப்பினும் தலையை மட்டும் மூடும் 'ஹிஜாப்' பற்றி இந்தத் தடையுத்தரவில் எவ்வித எதிர்ப்பும் பதிவு செய்யப்படவில்லை).
மாணவர்கள் எண்ணிக்கைக்கு வரம்பு:
ஒரு வகுப்பறையில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டு மாணவர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டப்பூர்வமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.
பெற்றோருக்கு மொழிப் பயிற்சி:
கல்வி முறை மற்றும் இத்தாலியச் சமூகத்துடன் ஒன்றிணைவதில் சிக்கலைச் சந்திக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள், இனி கட்டாயமாக இத்தாலிய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மெலோனி கூறுவது என்ன?
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து மாநாட்டில் பேசிய மெலோனி, "பள்ளிக்குச் செல்லும்போது முகத்தை மறைக்காமல் செல்வதுதான் சரியான முறை. இத்தாலியைப் பொறுத்தவரை, உண்மையான அல்லது கற்பனையான பாரம்பரியத்தின் பெயரால் ஒரு இளம் பெண் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது" என்று விளக்கமளித்தார்.
மேலும் மொழி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்துப் பேசிய அவர், "ஒரு வகுப்பில் இத்தாலிய மொழி தெரியாத ஒரு குழந்தை இருந்தால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அக்குழந்தை எளிதில் மொழியைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் ஒருங்கிணைந்துவிடும். ஆனால், மொழி தெரியாத மாணவர்களின் எண்ணிக்கை ஒரு வகுப்பில் பெரும்பான்மையாக இருந்தால், அது ஒருங்கிணைப்பை வளர்க்காது; மாறாகப் புறக்கணிப்பாகவே மாறும்" என்றார்.
பின்னணி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை:
ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவிலான குடியேறிகள் (Migrants) தஞ்சம் புகும் முக்கிய நாடாக இத்தாலி உள்ளது. எனவே, குடியேறிகளைத் தங்களது நாட்டின் கலாச்சாரம் மற்றும் விதிகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில்தான் இத்தகைய நடவடிக்கைகளை மெலோனியின் வலதுசாரி அரசு முன்னெடுத்துள்ளதுz
"இத்தாலிக்கு வந்து தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்புபவர்கள், எங்கள் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும், எங்கள் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு எங்கள் விதிகளை மதிக்க வேண்டும்" என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று இது அதிகாரப்பூர்வ சட்டமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.