துவரம்பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமிப்பு!

1 min ago

டெண்டர் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றத்தால் அரசுக்கு நிதி மிச்சம் – TNCSC மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS கவனம்!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம்பருப்பு கொள்முதலில், கடந்த மூன்று மாதங்களில் அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கிலோ துவரம்பருப்பு முந்தைய கொள்முதலில் ரூ.109.15-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.31.26 குறைந்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய ரூ.467.34 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதே அளவிலான கொள்முதலுக்கு முந்தைய காலத்தில் ரூ.654.90 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், டெண்டர் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு கொள்முதல் விலை குறைந்துள்ளது. டெண்டரில் அதிகமான விநியோகஸ்தர்கள் பங்கேற்றதும் விலை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் அளவு, தரம் மற்றும் விவரக்குறிப்புகளில் மாற்றமின்றி விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை தொடர்ந்து கிடைத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை சேமிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்