“கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி விடுதி ஆண்டு விழாவில் சோகம்” - மின்சாரம் தாக்கி இறுதியாண்டு மாணவர் உயிரிழப்பு!

06 Oct 26

கோவை:

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி விடுதி ஆண்டு விழாவின் போது, டி.ஜே  மின்சாதனம் அருகே நடனமாடிய இறுதியாண்டு மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரைக் காப்பாற்ற முயன்ற சக மாணவரும் காயமடைந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் மற்றும் டிஜே அமைப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடனமாடியபோது நேர்ந்த விபரீதம்

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த அன்புமணி என்பவரின் மகன் அமில்தன். இவர் கோவை வட்டமலைபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் இளங்கலை (மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல்) படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர், விடுதியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்

விழாவின்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த டிஜே மின்சாதனங்களுக்கு அருகே மாணவர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமில்தன் மீது பலத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரைக் காப்பாற்ற முயன்ற சரண் என்ற சக மாணவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் அவரும் காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதி – உயிரிழப்பு:

உடனடியாக அங்கிருந்தவர்கள் அமில்தனை மீட்டு சிகிச்சைக்காக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமில்தன் மின்சாரம் தாக்கியதால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அலட்சியமே காரணம் எனத் தந்தை புகார் போலீஸார் வழக்குப் பதிவு:

டிஜே மின்சாதனங்களை அமைத்தவர்கள், கல்லூரி விடுதிக் காப்பாளர் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியோர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதே தனது மகனின் மரணத்திற்கு நேரடிக் காரணம் என அமிர்தனின் தந்தை அன்புமணி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், துடியலூர் காவல்துறையினர் டிஜே உபகரணங்களை அமைத்த ரஞ்சித் (32), ஜெயசூர்யா (27), கனிஷ்கரன் குமார் (23) உள்ளிட்டோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 125(a) மற்றும் 106(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்