
சென்னை:
நடிகர் அஜித் குமார் அரசியலில் இறங்கினால் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்ற பயத்தின் காரணமாகவே, மக்கள் வரிப் பணத்தில் லண்டன் சென்று அவரை விஜய் சந்தித்துள்ளார் என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி:
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசு குறித்துப் பேசுகையில் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் மற்றும் நடிகர் அஜித் உடனான நகர்வுகளைக் கடுமையாகச் சாடினார்.
அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விடும்:
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு வந்துவிட்டால், விஜய்யின் அரசியல் எதிர்காலம் அத்துடன் முடிந்துவிடும். அஜித்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு களத்திற்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே நமது மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து லண்டன் வரை சென்றுள்ளார்.
அங்கு சென்று அஜித்திடம் 'நீ எனக்குப் போட்டியாக அரசியலுக்கு வந்துவிடாதே' என்று நேரில் சொல்லிவிட்டு வந்துள்ளார்," என்று குற்றம் சாட்டினார்.
கார் ரேஸ் அன்பால் அல்ல பயத்தால்:
தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் முன்னின்று தொடங்கி வைத்தது ஒன்றும் அஜித் மீதான உண்மையான அன்பினால் அல்ல. தனக்குப் போட்டியாக அஜித் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவரது ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தவும் போடப்பட்ட ஒரு கபட நாடகம்," என விமர்சித்தார்.
திமுக, தவெக ஆகிய கட்சிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக, தற்போது விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் சமன்பாடுகளை முன்வைத்துத் தொடுத்துள்ள இந்தத் தாக்குதல், அரசியல் அரங்கிலும் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.