
சென்னை:
திமுக மற்றும் மதிமுக இடையேயான வார்த்தைப் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "திமுகவில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது அப்பட்டமான கட்டுக்கதை" என மறுத்துள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, "கலைஞர் காலத்தோடு அரசியல் முடிந்துவிட்டது, இந்தப் பையனை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது" என்று இன்றைய எதிர்க்கட்சித் தலைவரைக் குறித்து கே.என்.நேரு தன்னிடம் விமர்சித்துப் பேசியதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நேருவின் விமர்சனமும் துரை வைகோவின் மறுப்பும்
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.என்.நேரு, "என் தந்தை வைகோ கோபக்காரர்; என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது, நான் திமுகவிலேயே வந்து இணைந்து விடுகிறேன்" என்று துரை வைகோ தன்னிடம் கூறியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், துரை வைகோவை 'சின்னப் பையன்' என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே துரை வைகோ தற்போது இந்த அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். தான் திமுகவில் இணைய விரும்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், தன்னை மிரட்டிப் பார்க்கும் நோக்கில் புனையப்பட்ட கட்டுக்கதைகள் என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
துரை வைகோவின் அதிரடி அம்பலப்படுத்தல்:
தன்னை விமர்சித்த கே.என்.நேருவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது கடந்த காலப் பேச்சுகளைத் துரை வைகோ பொதுவெளியில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுகையில்:
"இன்றைய எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கே.என்.நேரு என்னிடம் என்ன பேசினார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மூத்த தலைவரான அவர், 'கலைஞர் காலத்தோடு தமிழ்நாட்டில் சிறப்பான அரசியல் முடிந்து போச்சு' என்று என்னிடம் தெரிவித்துள்ளார்."
"மேலும், 'இந்தப் பையனை வைத்துக்கொண்டு இனிமேல் அரசியல் எல்லாம் செய்ய முடியாது' என்றும் அவர் தற்போதைய தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்," எனத் துரை வைகோ பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அரசியல் களத்தில் வெடித்த பூகம்பம்:
திமுகவின் மிக முக்கிய மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.என்.நேரு, தனது கட்சியின் தற்போதைய தலைமை குறித்தே அதிருப்தியாகப் பேசினார் என துரை வைகோ கூறியுள்ள இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 'மிசா' கைதில் இருந்த அரசியல் பின்னணி குறித்தும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தமக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்தும் திமுக தலைமையைத் துரை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கே.என்.நேருவின் தனிப்பட்ட உரையாடல்களை அவர் தற்போது பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருப்பது, திமுக - மதிமுக இடையிலான கூட்டணியில் உள்ள விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது