
சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி இந்திய மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு வழங்கியது யார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் எனவும், அவர் பதவியேற்ற பின்னர் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
140 கோடி மக்களை ஏமாற்ற அதிகாரம் கொடுத்தது யார்?
"நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பில் இருக்கும் தேர்தல் ஆணையம், தனது நடுநிலைத் தன்மையை இழந்து செயல்படுவது வேதனையளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் பெயரிலேயே ஒட்டுமொத்தமாக 140 கோடி இந்திய மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு வழங்கியது யார்? மக்களின் அடிப்படை வாக்குரிமையையும் ஜனநாயக மாண்புகளையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது.
நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருக:
மக்களின் நம்பிக்கையை இழந்து, தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்வதற்கான அரசியல் சாசனத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.
நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும்:
அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிச் செயல்படும் ஒரு ஆணையரின் கீழ் நடைபெற்ற தேர்தல்கள் நேர்மையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வாய்ப்பில்லை.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியேற்ற பிறகு நாட்டில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய அமைப்பின் கீழ் மறுதேர்தல்களை நடத்தி நாட்டின் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.