
பிரபல மின்னணு நிறுவனமான எல்ஜி தயாரிக்கும் ஸ்மார்ட் டிவிகள், திரை அணைக்கப்பட் நிலையிலும் பயனர்களின் உரையாடல்களைப் பதிவு செய்வதாகவும், அருகிலுள்ள வைஃபை நெட்வொர்க்குகள் மற்றும் பிற சாதனங்களை ரகசியமாக ஸ்கேன் செய்வதாகவும் அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்கள்:
'கேமர்ஸ் நெக்ஸஸ்', 'லெவல் 1 டெக்ஸ்' மற்றும் சில இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து எல்ஜி ஓஎல்இடி) ஸ்மார்ட் டிவிகளில் சமீபத்தில் ஒரு விரிவான (ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பயனர்களின் தனிவுரிமை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன:
ஆஃப் செய்தாலும் கேட்கும் மைக்ரோஃபோன்:
ஸ்மார்ட் டிவியின் திரை அணைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், டிவியில் அல்லது ரிமோட்டில் உள்ள மைக்ரோஃபோன் மூலம் சுற்றுப்புறத்தில் பேசப்படும் உரையாடல்களை டிவி பதிவு செய்வதாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். முக்கியமாக பாஸ்வேர்ட், பேங்க் கார்டு எண்கள் போன்ற வார்த்தைகள் கூட டெக்ஸ்டாக டிவியின் லாக் ஃபைல்களில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஃப்லைன் டேட்டா சேமிப்பு:
இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் இந்த ஆடியோ பதிவுகள் டிவியின் மெமரியிலேயே சேமிக்கப்படுகின்றன. மீண்டும் இணைய இணைப்பு கிடைத்தவுடன், சேமிக்கப்பட்ட ஆடியோ தரவுகள் சர்வருக்குப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நெட்வொர்க் ஸ்கேனிங்:
டிவி இயங்கும் அதே வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் உள்ளிட்ட பிற சாதனங்களின் தகவல்களையும், ஐபி முகவரிகளையும் இந்த டிவிகள் தொடர்ந்து ஸ்கேன் செய்கின்றன.
வைஃபை கண்காணிப்பு:
அருகிலுள்ள பிற வைஃபை நெட்வொர்க்குகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் சிக்னல் பலம் ஆகியவற்றையும் இந்த டிவிகள் சேகரிக்கின்றன. இதன் மூலம் டிவி எந்த இடத்தில் இருக்கிறது என்ற துல்லியமான புவியியல் தகவலை அறிய முடிகிறது.
எதற்காக இந்தத் தகவல்கள் திருடப்படுகின்றன?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஸ்மார்ட் டிவிகளில் உள்ள 'ஆட்டோமேட்டிக் கன்டென்ட் ரெகக்னிஷன்' என்ற கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் என்ன பார்க்கிறார்கள் என்ற தரவுகளோடு, இந்த நெட்வொர்க் மற்றும் ஆடியோ தரவுகளையும் இணைத்து 'எல்ஜி ஆட் சொல்யூஷன்ஸ்' என்ற விளம்பரப் பிரிவுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்பத் துல்லியமான விளம்பரங்களை பல்வேறு சாதனங்களில் வழங்க நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.
கூடுதலாக, எல்ஜி டிவிகளில் பயன்படுத்தப்படும் 'வெப் ஓஎஸ்' இயங்குதளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், இதனால் ஹேக்கர்கள் எளிதாக டிவியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கேமரா மற்றும் மைக்ரோஃபோனை இயக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் விளக்கம் என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்ஜி நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புதிய விளக்கம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, "எங்கள் டிவிகள் பயனர்களின் சுற்றுப்புற உரையாடல்களைச் சேகரிப்பதோ, பதிவு செய்வதோ இல்லை. வாய்ஸ் கமாண்ட் வசதி பயனர்களின் விருப்பத்தின் பேரிலேயே செயல்படுகிறது" என எல்ஜி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.