
வாஷிங்டன்:
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தலைமையை உலக அளவில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக 'சூப்பர் இண்டெலிஜன்ஸ் ஃபோர்ஸ்' என்ற புதிய அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் தலைவராக, அமெரிக்காவின் தற்போதைய தேசிய உளவுத்துறை இயக்குநரான ஜெ. கிளேட்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
'சூப்பர் இண்டெலிஜன்ஸ்' அமைப்பு உருவாக்கம்
இந்தத் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான கொள்கைகளை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் 'சூப்பர் இண்டெலிஜன்ஸ் ஃபோர்ஸ்' என்ற பெயரில் இந்தப் புதிய அமைப்பை ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
தலைவராக ஜெ. கிளேட்டன் நியமனம்:
தற்போது அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராகப் பதவி வகிக்கும் ஜெ. கிளேட்டன், இந்த புதிய சூப்பர் இண்டெலிஜன்ஸ் குழுவுக்குத் தலைமை தாங்குவார். இவர் தொழில்நுட்ப வல்லுநர் இல்லை என்றாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும், இணையப் பாதுகாப்பு, ராணுவக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் கருத்தில் கொண்டே அவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குழுவின் முக்கியப் பணிகள்:
ஆய்வு அறிக்கை தாக்கல்:
இந்த அமைப்பு அடுத்த 120 நாட்களுக்குள் AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான சூசி வைல்ஸ் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு:
AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்தும், தற்போதுள்ள சட்ட அமைப்புகளின் மூலம் அரசின் விரைவான தகவல் பரிமாற்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த அமைப்பு ஆராயும்.
சீனாவை எதிர்கொள்ளும் வியூகம்:
அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பான முறையில் AI-ஐ ஊக்குவித்து சீனாவிற்கு எதிரான தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்காவை முன்னிலையில் வைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்கள்:
ஜெ. கிளேட்டன் தலைவராக செயல்படும் இந்த அமைப்பில் பல முக்கிய அதிகாரிகளும், நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்:
துணைத் தலைவர்கள்:
பென்டகனின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எமில் மைக்கேல், ஃபெடரல் டிரேட் கமிஷன் தலைவர் ஆண்ட்ரூ பெர்குசன் மற்றும் பணியாளர் மேலாண்மை அலுவலகத்தின் இயக்குநர் ஸ்காட் குபோர்.
முக்கிய உறுப்பினர்கள்:துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சூசி வைல்ஸ்.
வெளிப்புற ஆலோசகர்கள்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் மற்றும் முன்னாள் AI சிறப்பு அதிகாரியும், முதலீட்டாளருமான டேவிட் சாக்ஸ்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, நுகர்வோர் மற்றும் பொதுநல அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வழங்குநர்களுடனும் இணைந்து இந்த அமைப்பு விரிவாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.