"செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் 'குலியானா' தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்" - மருத்துவ நன்கொடை வழங்கி மென்பொருள் நிறுவனத் தலைவர் மார்க் பெனியோஃப் !

16 hours ago

சான் பிரான்சிஸ்கோ:

ஹவாய் மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய மருத்துவ நன்கொடையை வழங்கிய முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் (சேல்ஸ்ஃபோர்ஸ்) தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப், தற்போது அபரிமிதமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அனைத்தும் ஹவாய் மக்களின் பாரம்பரியப் பொறுப்புணர்வைக் குறிக்கும் 'குலியானா' என்ற தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவ நன்கொடை:

ஹவாய் மாகாணத்தின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், மக்களுக்குத் தடங்கலற்ற உயர்தர மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அங்குள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் ஆயிரத்து இருநூற்று ஐம்பது கோடி ரூபாயை மார்க் பெனியோஃப் மற்றும் அவரது மனைவி லின் பெனியோஃப் ஆகியோர் அண்மையில் நன்கொடையாக வழங்கினர். இது ஹவாய் மாகாண வரலாற்றில் மருத்துவத்துறைக்கு ஒரு தனிநபர் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாகும். ஹவாய் மக்கள் மற்றும் சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆழமான பிணைப்பையே இது காட்டுகிறது.

'குலியானா' தத்துவமும் தொழில்நுட்ப நெறிமுறைகளும்:

சமீபத்தில் நடைபெற்ற தமது நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் பேசிய மார்க் பெனியோஃப், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், தாங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தால் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இதனை விளக்க 'குலியானா' என்ற ஹவாய் தத்துவத்தை அவர் முன்வைத்தார். 'குலியானா' என்பது தனிமனித மற்றும் சமூகப் பொறுப்புணர்வைக் குறிக்கும் ஒரு பாரம்பரியச் சொல்லாகும். "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறநெறி சார்ந்ததாகச் செயல்பட வேண்டும். அறத்தின் அடிப்படைப் பண்பு 'பொறுப்புணர்வு' ஆகும். இந்தத் தொழில்நுட்பம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்பதால், சமூகத்தையும் உலகத்தையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வை மென்பொருள் நிறுவனங்கள் அவசியம் ஏற்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.

சமூக ஊடகங்களின் தவறுகளைத் தவிர்க்க எச்சரிக்கை:

 கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சமூக ஊடகங்கள் வளர்ந்ததால் இன்று உலகளவில் ஏற்பட்டுள்ள சமூகச் சீர்கேடுகள் மற்றும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், அதே தவறை செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் உலகம் செய்துவிடக் கூடாது என்று எச்சரித்தார். மக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே, இத்தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பானதாகவும், மனிதர்களுக்குக் கீழ்ப்படியும் வகையிலும் உருவாக்குவது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தொழில்நுட்பப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநிறுவனங்களுக்கு மத்தியில், இவரது இந்த 'குலியானா' அறைகூவல், தொழில்நுட்ப உலகில் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை தீவிர விவாதப் பொருளாக மாற்றியுள்ளது

முக்கிய செய்திகள்