“அரிசி மற்றும் கோதுமைக்கு சிறந்த மாற்று சிறுதானியங்கள் - தினை, சாமை, கேழ்வரகின் வியக்க வைக்கும் நன்மைகள்!

24 Aug 26

தற்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுப் பழக்கங்களால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற வாழ்வியல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், மக்கள் மீண்டும் தங்களது பாரம்பரிய உணவான சிறுதானியங்களை நோக்கித் திரும்பியுள்ளனர். மூன்று வேளையும் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே நம்பியிருக்காமல், தினசரி உணவில் தினை, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.

கேழ்வரகு:

கேழ்வரகு உடலுக்கு அதிக குளிர்ச்சியையும், அளப்பரிய ஆற்றலையும் தரக்கூடியது.

எலும்புகளுக்கு பலம்:

 மற்ற அனைத்து தானியங்களையும் விட கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது. இது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கவும் பேருதவி புரிகிறது.

ரத்த சோகைக்குத் தீர்வு

இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்துகிறது.

தினை:

தினை மிகவும் பழமையான சிறுதானியங்களில் ஒன்றாகும். இது அதிக ஆற்றலைத் தரக்கூடியது.

சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது:

தினையின் கிளைசெமிக் குறியீடு (மிகவும் குறைவு. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து, சீராக வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மண்டல பாதுகாப்பு:

இதில் உள்ள வைட்டமின் பி1 நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, மூளையின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக்குகிறது.

சாமை:

அரிசியைப் போலவே சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான சிறுதானியம் சாமை.

செரிமானத்தை மேம்படுத்தும்:

 சாமையில் நார்ச்சத்து (Fiber) மிக அதிகம். இது குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் போன்ற செரிமானக் கோளாறுகளை முழுமையாகத் தீர்க்கிறது.

உடல் எடைக் குறைப்பு:

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சாமை ஒரு வரப்பிரசாதமாகும்.

 

முக்கிய செய்திகள்