“தொட்டில் குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம்” - அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியீடு!

11 hours ago

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்" கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' கீழ் அரசு மருத்துவமனைகளில் விடப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இந்த தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தொட்டில் குழந்தைகளுக்கான புதிய நடைமுறை

அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் அல்லது ஆதரவற்று விடப்படும் குழந்தைகளுக்கான ஒரு கிராம் (22 மாற்றுத் தூய்மை கொண்ட) தங்க மோதிரத்தை, அக்குழந்தைகளின் சார்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பெற்றுக் கொள்வார்.

திட்டத்தின் இதர முக்கிய விதிமுறைகள்

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

 கடந்த ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். தீவிர சிசு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் குழந்தைகளுக்கும் இந்த மோதிரம் வழங்கப்படும்.

யாருக்குக் கிடைக்காது?

கருவிலேயே உயிரிழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும் குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்பட மாட்டாது.

தாயார் இறந்துவிட்டால் யாரிடம் வழங்கப்படும்?

 பிரசவத்தின் போது தாய் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால், மோதிரம் முன்னுரிமை அடிப்படையில் குழந்தையின் தந்தையிடம் வழங்கப்படும். தந்தை இல்லாத பட்சத்தில் தாய்வழிப் பாட்டியிடமும், அவர்களும் இல்லாத பட்சத்தில் முறையான ஆவணங்களைச் சரிபார்த்த பின் சட்டப்பூர்வ பாதுகாவலரிடமும் ஒப்படைக்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் விநியோக ஏற்பாடுகள்:

தங்க மோதிரங்கள் என்பதால் மருத்துவமனைகளில் கூடுதல்

பாதுகாப்புப் பெட்டகம்:

மோதிரங்களைப் பாதுகாப்பாக வைக்க இரட்டைச் சாவி வசதியுடன் கூடிய பாதுகாப்புப் பெட்டகங்கள் மருத்துவமனைகளில் அமைக்கப்படும்.

கண்காணிப்பு:

பெட்டகம் இருக்கும் அறை, அறைக்குச் செல்லும் வழி மற்றும் மோதிரம் விநியோகம் செய்யப்படும் இடம் என மூன்று இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படுவதோடு, திருட்டு எச்சரிக்கை ஒலிப்பான்களும் அமைக்கப்படும்.

விநியோக நேரம்:

தாயும் சேயும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை கண்காணிப்புக் கருவி முன்பாக மோதிரத்தைக் காண்பித்து உறுதிசெய்த பின்னரே குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

பின்னணி:

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், தாய்மாமன் சீராகத் தங்கம் வழங்கும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டைப் போற்றும் வகையிலும் சுமார் 755 கோடி ரூபாய் நிதியீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்