
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) நடைபெற்று வரும் எடை மோசடிகள், பொதுப் பணியிட மாறுதல் உத்தரவுகளை அமல்படுத்துவதில் உள்ள முறைகேடுகள் மற்றும் பணியாளர்கள் இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜன் அவர்களை, சங்கத்தின் தலைவர்கள் ஈ.பி.அ.சரவணன், கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் ஈஸ்வரன், துரை உள்ளிட்ட குழுவினர் நேரில் சந்தித்து விரிவான புகார் மனுவை அளித்தனர்.
நுகர்வோர் சங்கம் முன்வைத்த முக்கியப் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் - எடை மோசடி ஆதாரத்துடன் அம்பலம்:
திருப்பூர் வேலம்பாளையம் பகுதி ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி எடையில் தில்லுமுல்லு செய்வதற்காக ஒரு கிலோ இரும்பு எடைக்கல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சங்க நிர்வாகிகளால் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. நுகர்வோர் சங்கத்தின் உடனடிப் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விற்பனையாளர் 24 மணி நேரத்திற்குள் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற ஆய்வுகளை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும்.
பணியிட மாறுதலில் முறைகேடு:
திருப்பூர் வடக்கு வட்டம், செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களுக்கான பொதுப் பணியிட மாறுதல் உத்தரவை முறையாக அமல்படுத்தாமல் சில அதிகாரிகள் குளறுபடி செய்து வருகின்றனர். லஞ்ச லாவண்யங்களுக்கு இடமளித்து ஒரே இடத்தில் தொடர்ந்து நீடிக்க முயலும் ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுத்து, மாறுதல் உத்தரவை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்
ஊழியர்கள் பொதுவெளியில் மோதல்:
தாராபுரம் மற்றும் மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்களான வேலுமணி மற்றும் சுலோச்சனா ஆகியோர், ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய விவகாரத்தில், கூட்டுறவு அலுவலக வளாகத்திலேயே பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்திலும் குடுமிப்பிடி சண்டையிலும் ஈடுபட்டனர். இத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது வெறும் தற்காலிக சஸ்பெண்ட் நடவடிக்கையோடு நிறுத்தாமல், நிரந்தரத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வெளிநபர்கள் நடமாட்டத்திற்குத் தடை:
ரேஷன் கடைகளுக்குள் பணியில் இல்லாத வெளிநபர்கள் அதிக அளவில் அமர்ந்திருப்பதால் தேவையற்ற குளறுபடிகளும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே, நியாயவிலைக் கடைகளுக்குள் வெளிநபர்களின் நடமாட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்:
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதோடு, விடுபட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ரேஷன் திட்டப் பயன்களில் முழுமையாக இணைக்கச் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடை இயக்க நேரங்களை உறுதி செய்தல்:
அனைத்து வேலை நாட்களிலும் அரசு நிர்ணயித்த நேரத்தின்படி ரேஷன் கடைகள் முழுமையாகத் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரில் உறுதி செய்ய வேண்டும்.
அமைச்சரின் உறுதிமொழி
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித முறைகேடுகளையும் அரசு அனுமதிக்காது என்றும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது உடனடியாகத் துறைரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜன் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார்.