
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், ஊழலைத் தடுக்கவும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாதாந்திர அன்றாட சில்லறை செலவினங்களுக்காக வழங்கப்படும் நிதியை 10 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்:
காவல் நிலையங்களின் அன்றாடத் தேவைகளான எழுதுபொருட்கள் வாங்குதல், வாகனப் பராமரிப்பு, வழக்கில் தொடர்புடையவர்களுக்கான செலவுகள் மற்றும் அவசரகாலத் தேவைகளைச் சமாளிக்க மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அரசின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தற்போதைய விலைவாசி மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு மிகவும் குறைவாக இருந்ததால், அதனைப் பல மடங்கு உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களின் தரத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட்ட நிதி விவரம்:
காவல் நிலையங்களின் அளவு மற்றும் பணிச்சுமைக்கு ஏற்ப (சிறிய, நடுத்தர, பெரிய காவல் நிலையங்கள்) இந்த எதிர்பாராத செலவு நிதி கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது:
சிறிய காவல் நிலையங்கள்:
இதுவரை மாதம் ரூ.3,750 ஆக இருந்த செலவு நிதி, தற்போது ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நடுத்தர காவல் நிலையங்கள்:
இதுவரை மாதம் ரூ.6,000 ஆக இருந்த செலவு நிதி, தற்போது ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய காவல் நிலையங்கள் :
இதுவரை மாதம் ரூ.8,250 ஆக இருந்த செலவு நிதி, தற்போது ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் முழுமையாகச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நடவடிக்கையின் நோக்கம்:
காவல் நிலையங்களில் அடிப்படைச் செலவுகளுக்குப் போதிய நிதி இல்லாமல் பொதுமக்களை அல்லது புகார்தாரர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்போதுதான் அங்கு லஞ்சம் மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதைத் தடுக்கும் வகையிலேயே "லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்குதல்" என்ற அரசின் இலக்கின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், "அரசின் இந்த நிதி உயர்வு காவல் நிலையங்களின் செயல்பாட்டை மிகவும் எளிதாக்கும். இதன் மூலம் காவலர்கள் பொதுமக்களுக்கு எவ்விதத் தடையுமின்றிச் சிறந்த சேவையை வழங்கவும், மக்கள் மத்தியில் காவல் துறை மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கவும் முடியும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகக் காவல் துறை தரப்பிலும், சமூக ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டு வந்த இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு, காவல் துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.