“சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு மேலும் 4 பேர் அதிரடி கை” – கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

5 hours ago

சிவகங்கை:

சிவகங்கை அருகே பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 பேரைத் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

பழிக்குப் பழி படுகொலை:

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் (எ) மதன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடந்த ராஜேஷ் என்பவரது கொலை வழக்கில் மதனின் கூட்டாளிகள் கைதாகியிருந்தனர். இதனால் ராஜேஷின் ஆதரவாளர்களுக்கும் சுள்ளான் மதன் தரப்பிற்கும் இடையே சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் கடுமையான முன்விரோதம் நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலமங்கலம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியைப் பார்க்க வந்த சுள்ளான் மதனை, இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பியோடிய மதனை அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்:

பட்டப்பகலில் அரங்கேறிய இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முதற்கட்ட கைது:

சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும், நோட்டமிட்டுத் தகவல் கொடுத்ததாகவும் பிரதீப் (28), பாலமுருகன் (19), பாபு (23) ஆகிய 3 பேரைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

தற்போதைய அதிரடி கைது:

 தலைமறைவாக இருந்த மற்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வந்த தனிப்படையினர், தற்போது இக்கொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய சந்தோஷ், ஜெய மாணிக்கராஜ், முத்து சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகிய மேலும் 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.

ஆயுதங்கள் பறிமுதல் மற்றும் தீவிர விசாரணை:

கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்தும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் தப்பியோடப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிரட்டல் பதிவுகளை வெளியிட்டு வந்த நபர்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் பிடிக்கக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்..

முக்கிய செய்திகள்