1 “நமது கையில் உள்ள மிகப்பெரிய பலமான நீர்வளம் காணாமல் போகிறது” - தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் குப்பைகள் உள்ளன - சௌமியா அன்புமணி வேதனை!

“நமது கையில் உள்ள மிகப்பெரிய பலமான நீர்வளம் காணாமல் போகிறது” - தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் குப்பைகள் உள்ளன - சௌமியா அன்புமணி வேதனை!

1 min ago

சென்னை, ஆகஸ்ட் 19:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, "நமது கையில் உள்ள மிகப்பெரிய பலமான மற்றும் வளமான நீர்வளம் காணாமல் போகிறது" என வேதனை தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேப்பிங் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயற்கை அளித்த வரம் நீர்வளம்:

சட்டசபையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தாக்கல் செய்த மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தருமபுரி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, "இயற்கை நமக்குக் கொடுத்த வரத்தை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நமது மிகப்பெரிய சொத்தான நீர்வளம் நம்மை விட்டுச் செல்கிறது. சென்னையில் நீர்நிலைகள் மாயமாகிவிட்டன. ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

கூவம் ஆற்றில் கழிவுகள்:

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் எங்கும் இல்லாத பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னையில்தான் உள்ளது; இது ஒரு அதிசயம். சதுப்பு நிலங்கள் இருந்தால் மழைநீரைத் தேக்கி வைக்க முடியும், வெள்ளம் வராது. அதேபோல் கூவம் ஆறும் ஒரு மிகப்பெரிய அதிசயம்தான். திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் கூவம் ஆறு, அம்பத்தூர் தாண்டி சென்னைக்கு வரும்போது ரசாயனக் கழிவுகள் கலந்து சாக்கடையாக மாறுகிறது. நல்ல தண்ணீரில் கழிவுகளைக் கொட்டுவது சட்டப்படிக் குற்றமாகும்" எனச் சுட்டிக்காட்டினார். ஆற்றை அழகுபடுத்துவதை விடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து அதைத் தூய்மைப்படுத்துவதே முக்கியம் என்று கூறினார்.

தாமிரபரணி குப்பைமேடாக உள்ளது:

தமிழ்நாட்டின் வற்றாத நதியான தாமிரபரணி குறித்துப் பேசிய அவர், "தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் குப்பைகள் கிடக்கின்றன. ஆற்றை முதலில் சுத்தம் செய்யாமல், அழகுபடுத்தி என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆறுகள் இணைப்பு மற்றும் தூர்வாருதல்:

"தமிழ்நாட்டில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை முழுமையாகத் தூர்வாரினால் மாநிலத்திற்குப் போதுமான தண்ணீர் கிடைத்துவிடும். தமிழ்நாட்டில் பல்வேறு ஆறுகள் உள்ளன, முதலில் அவற்றை இணைக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைச் சரியாக அளவிட்டு மேப்பிங் செய்ய வேண்டும் என்றும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் பதில்:

சௌமியா அன்புமணியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேப்பிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்

 

முக்கிய செய்திகள்