
சென்னை, ஆகஸ்ட் 19:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் போது, "முந்தைய திமுக ஆட்சியில் தவறுகள் நடந்திருக்கலாம் என ஒப்புக்கொண்ட மூத்த உறுப்பினர் அண்ணன் ஐ.பெரியசாமிக்கு எனது பணிவான நன்றிகள்" என்று அமைச்சர் ராஜ்மோகன் குறுக்கிட்டுப் பேசியது சபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் காரசார விவாதம்:
இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது., விவாதத்தின் போது திமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி பேசிக்கொண்டிருந்தார்.
குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன்:
ஐ.பெரியசாமியின் பேச்சின் போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “பல்வேறு விஷயங்களை மூத்த உறுப்பினர் அண்ணன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள், ஆதாரம் காட்டலாம் என்று சொல்கிறார்கள். அமைச்சர்கள் எடுத்து பேசுகிறபோதே தவறு நடந்திருக்கலாம் என்று அவரே சொல்கிறார். முதலில் தவறு நடந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டதற்கு ஒரு பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
மேலும், "ஆதாரங்களை நாங்கள் காட்டும்போதே இப்படி பேசுகிறார்கள். முதலமைச்சர் விஜய் ஆதாரங்களை வைத்திருக்கிறார். அவர் ஒருவேளை எடுத்துக் காட்டிவிட்டார் என்று சொன்னால், அவர்கள் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் அதிரடி:
அமைச்சர் ராஜ்மோகனின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், “ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு, நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது, மூன்று துறைகளை ஆய்வு செய்த கோப்புகள் (Files) என் மேஜையில் இருக்கிறது என்று சொன்னார். அது ஏதோ போகிற போக்கில் அவர் சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கிறது" என்று பதிலடி கொடுத்தார்.
ஐ. பெரியசாமியின் பதில்:
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஐ. பெரியசாமி, “நாங்கள் அன்பாகவும், ஆசையாகவும் பேசியதால்தான் ஒரே தொகுதியில் ஒன்பது முறை நிற்கும் வாய்ப்பும், ஏழு முறை வெற்றி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இதை மக்கள் வழங்கிய அங்கீகாரமாக நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடியான பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளன.