பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் தகவல் – *தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

1 min ago

மனு தாக்கல் :

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, காவல்துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புகார் அளிக்கவில்லை :

இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமைச் செயலரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ இதுவரை புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், “எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பதற்கு என்ன உறுதியான ஆதாரம் உள்ளது? செய்தித்தாள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த ஐஏஎஸ் அதிகாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவரா? அவர் புகார் அளிக்காத நிலையில் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒத்திவைப்பு :

மேலும், சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியிடமும், தலைமைச் செயலரிடமும் மீண்டும் விசாரித்து நாளை நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்குமாறு மாநில அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்