தொடரும் Give Away Scam? இன்ஸ்டாகிராம் Influencer-களைச் சுற்றும் அடுத்தடுத்த சர்ச்சைகள்!

5 hours ago

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி கார் பரிசு முதல் மருத்துவ உதவி நிதி வசூல் வரை... பொதுமக்களின் நம்பிக்கை விளையாட்டாகிறதா?

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகவும், Followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் Give Away யுக்தி தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பரிசுப் பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பது, அதிக Engagement உருவாக்குவது, பொதுமக்களிடம் பணம் வசூலிப்பது எனத் தொடங்கும் சில நடவடிக்கைகள் தற்போது மோசடிப் புகார்கள் வரை சென்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதாகவும், மருத்துவச் செலவுகளுக்காக நிதி திரட்டுவதாகவும் கூறி பொதுமக்களிடம் பணம் பெறப்படும் நிலையில், அந்தப் பணம் உரிய நபர்களுக்குச் சென்றடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

38 லட்சம் Followers... ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி கார்!

'கோயமுத்தூர் மாப்பிள்ளை' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் செயல்பட்டு வரும் Influencer சல்மான் கான்  சுமார் 38 லட்சம் Followers இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர் Give Away என்ற பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி கார் வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் புகார்கள் தொடர்பாக, பரிசு அறிவிப்பு உண்மையானதா, அதற்கான விதிமுறைகள் என்ன, பரிசு யாருக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ உதவி என்ற பெயரில் பணம் வசூலிப்பு?

இதற்கிடையே, மருத்துவச் செலவுகளுக்காகப் போராடும் மூதாட்டி ஒருவருக்கு உதவுவதாகக் கூறி, பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட Influencer தனது மொபைல் எண்ணைக் கொடுத்து பொதுமக்களிடம் பணம் அனுப்புமாறு கேட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அப்படியானால், இதுவரை எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? அந்தத் தொகை முழுமையாக மூதாட்டியைச் சென்றடைந்ததா? வசூலிக்கப்பட்ட பணத்திற்கான கணக்கு வெளியிடப்பட்டுள்ளதா? நிதி வழங்கிய பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா?

எனப் பல கேள்விகள் எழுகின்றன.

 *Influencer-களுக்கு கண்காணிப்பு இல்லையா?*

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான Followers வைத்திருப்பது மட்டுமே ஒருவரின் நம்பகத்தன்மைக்கான அடையாளமாகிவிடாது.

Give Away, Charity, Medical Fund என்ற பெயர்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும்போது அதற்கான வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் அவசியம்.

ஒருவரின் துயரத்தை சமூக வலைதளப் பிரபலமடைவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

முக்கிய செய்திகள்