“திடீர் மற்றும் கடுமையான நெஞ்சுவலி” - மாரடைப்பாக இல்லாமல், பிற உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் வேறு நோயாக இருக்கலாம்!

6 hours ago

நெஞ்சுவலி என்றாலே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது 'மாரடைப்பு' தான். ஆனால், நெஞ்சில் ஏற்படும் திடீர் மற்றும் மிகக் கடுமையான வலி மாரடைப்பாக இல்லாமல், உயிருக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய 'பெருந்தமனி கிழிவு என்ற தீவிர நிலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெருந்தமனி கிழிவு என்றால் என்ன?

பெருந்தமனி என்பது இதயத்திலிருந்து உடலின் மற்ற அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் (மூளை, சிறுநீரகம், குடல், கால்கள்) தூய இரத்தத்தை எடுத்துச் செல்லும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இரத்தக் குழாயாகும். சில காரணங்களால் இந்த குழாயின் உட்புறச் சுவரில் திடீரென ஒரு கிழிவு அல்லது வெடிப்பு ஏற்படும் நிலையே 'ஆர்டிக் டைசெக்ஷன்' எனப்படுகிறது. இந்த கிழிவின் வழியாக இரத்தம் உள்ளே புகுந்து, இரத்தக் குழாயின் சுவர்களை இரண்டாகப் பிரித்துவிடும்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைபடுவதால்:

திடீர் பக்கவாதம் ஏற்படலாம். நோயாளிக்கு பேச முடியாமல் போவது அல்லது உடல் உறுப்புகள் செயலிழக்கலாம்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால்:

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும்.

குடலுக்கு இரத்தம் செல்லாததால்:

 குடல் திசுக்கள் இரத்த ஓட்டமின்றி அழுகிப் போகும் நில உண்டாகும். இது மிகக் கொடிய வயிற்று வலியை ஏற்படுத்தும்.

கால்களுக்குச் செல்லும் இரத்தம் தடைபடுவதால்:

 கால்களில் நாடித் துடிப்பு குறைந்து நரம்பு மற்றும் தசை பாதிப்புகள் ஏற்படும்.

யாருக்கெல்லாம் இந்த ஆபத்து அதிகம்?

உயர் இரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் வைக்காதவர்கள்.

இரத்தக் குழாய் மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் உள்ளவர்கள்.

அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

நெஞ்சுப் பகுதியில் பலத்த அடிபட்டவர்கள் (உதாரணமாக: வாகன விபத்துகள்).

மருத்துவர்களின் எச்சரிக்கை:

 "நெஞ்சில் அல்லது முதுகில் திடீரென தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டால், அது வெறும் வாயுத் தொல்லை என்றோ அல்லது சாதாரண நெஞ்சு வலி என்றோ அலட்சியம் செய்யக் கூடாது. உடனடியாக அவசர மருத்துவச் சிகிச்சையை  நாட வேண்டும். சிடி ஸ்கேன் அல்லது எக்கோ  பரிசோதனை மூலம் மட்டுமே இது மாரடைப்பா அல்லது பெருந்தமனி கிழிவா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் உயிரையும் உறுப்புகளையும் காப்பாற்ற முடியும்" என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்