
சென்னை:
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கில் சிக்கி ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் ஆர். வீரமணி, தற்போது எழுந்துள்ள மற்றொரு புதிய போக்சோ புகாரின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்டு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தொடரும் போக்சோ வழக்குகள்:
தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபரான 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் ஆர். வீரமணி (84), கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். ஏழைச் சிறுமிகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி அளிப்பதாகக் கூறி, அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரிக்க தமிழக காவல்துறையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) தீவிர விசாரணையில், மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
புதிய புகாரும், நீதிமன்ற ஆஜரும்:
இந்த நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த தரப்பில் இருந்தும், கடந்த 2004-ஆம் ஆண்டு வீரமணியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையிலும் வீரமணி மீது அடுத்தடுத்து புதிய போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணியை, இந்தப் புதிய வழக்குகளின் கீழ் சிறைத்துறை அதிகாரிகள் வாயிலாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முறைப்படி மீண்டும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பத்மா, வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
பாயும் குண்டாஸ்.. கைதாகும் கூட்டாளிகள்:
இந்த விவகாரத்தில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நீண்டகால உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டர் சட்டம்:
குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீதும் 'குண்டர் தடுப்புக் காவல் சட்டம்' பாய்ந்துள்ளது.
ஓட்டுநர்கள் கைது:
மேலும், வீரமணியிடம் பல ஆண்டுகளாக ஓட்டுநர்களாகப் பணியாற்றி, சிறுமிகளை அழைத்து வர உடந்தையாக இருந்த லாசர், பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய 3 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அக்டோபர் 5-ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
வழக்கின் அடுத்தகட்டம்:
ஆரம்பத்தில் இந்த வழக்கில் காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 'வழக்கு முடிப்பு அறிக்கையை' ஏற்க மறுத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், விசாரணையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்த கைது படலங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும், வீரமணியின் வங்கிக் கணக்கில் இருந்து சாந்திக்கு சுமார் ரூ. 24 கோடிக்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அதிஉயர் பாதுகாப்புப் பிரிவில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து பதியும் புதிய வழக்குகளால் ஜெம் வீரமணி மீதான சட்டப்பிடி மேலும் இறுகியுள்ளது.