“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது!” : அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்…

Author: kavin kumar
6 February 2022, 10:59 pm

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா, ஒமிக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அரசு கலை கல்லூரி,பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் என அனைத்திற்கும் ஆன்லைன் முறையிலே தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு தேர்வுகள் துவங்கும் எனவும், பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு மட்டும் நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடந்ததால் மூன்றாவது செமஸ்டர் நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நான்காவது செமஸ்டரில் எழுத்து தேர்வு இல்லை என்பதால் மூன்றாவது செமஸ்டரில் நேரடி தேர்வு நடைபெறும் என்று உறுதிபட கூறியுள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?