தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பால் திணறிய வாகனங்கள்..!!

Author: Rajesh
1 May 2022, 4:32 pm
hokenakkal - updatenews360
Quick Share

தர்மபுரி: மே தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்து காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார். இந்த நிலையில் மே தினத்தையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.

அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் நடை பாதையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்ததால் அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே சாலை ஓரம் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றது.

Views: - 583

0

0