நீங்க கைது செய்ய செய்ய தமிழகத்தில் பாஜக வளர்ந்துக்கிட்டே இருக்கும் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 9:02 pm
Bjp Vanathi - Updatenews360
Quick Share

கோவை : 1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட பிரசுரங்களை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கி எடுத்துரைத்தார். பின்னர் பாஜக அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நாடுகளை கொரோனா பாதிப்பு அச்சுறுத்திய சூழலில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கி மக்களை பாதுகாத்த தலைவராக பிரதமர் உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் உணவு தானியம், தடுப்பூசியை தாண்டி, சிறு குறு தொழில்களுக்கு உதவியுள்ளார் என்றும் பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தி உள்ளார் என்றும் டிஜிட்டல் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகம் அதிக பலன் அடைந்து உள்ளதாகவும் கூறினார். முத்ரா கடன் தமிழகத்திற்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் செல்வமகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழகம் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தொழில்துறையில்
3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றும் மத்தியில் பதினோரு பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் சொந்தமாக தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உலக அளவில் கூட்டமைப்பை உருவாக்கியவர் மோடி என கூறினார். மேலும் பிரதமர் தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களை கொண்டு கொண்டுவந்தவர் என்றும் நாட்டில் இருந்த பிரதமர்களின் வாழ்க்கைகளை தெரிந்துகொள்ள அலுவலகத்தை அமைத்துள்ளார் என்றும் கூறினார். மேலும் நதிகளை இணைக்க பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார் என கூறிய அவர் அதற்காக தமிழகமும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதில் பிரதமர் லட்சியமாக உள்ளார் என தெரிவித்தார். கலவரங்கள் இல்லாமல் மக்கள் இணக்கத்துடன் வாழவேண்டும், மத சுதந்திரத்தை காக்கின்ற அரசாக இந்த அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக எந்த வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறிய அவர் மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

பாஜக ஆதரவாளர் கார்திக் கோபினாத் கைது தொடர்பாக பேசிய அவர்,
மீண்டும் மீண்டும் பாஜக ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம் என கூறினார்.

கருத்துக்களை பொதுவெளியில் சட்டத்திற்கு உட்பட்டு சொல்வதற்கும், அதேபோல விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா.? மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இம்மாதிரியான முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அந்த கனவு ஒரு போதும் பலிக்காது என தெரிவித்தார். கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என தெரிவித்ததற்கு கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், தேசியக்கொடிக்கு என கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பது ஒரு போதும் பாஜக மாற்ற நினைக்காது என கூறினார்.

Views: - 504

0

0