நான் ஊழல் செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய்… நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 4:41 pm
Minister Moorthy - Updatenews360
Quick Share

பத்திரபதிவுத்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் வழங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

மதுரை குலமங்கலம் கிரமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 479 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

“அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.

என் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா?

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பத்திரப்பதிவு துறையின் நிர்வாகம் மிக சிறப்பாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை 7 மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஜனாதிபதி.

தமிழக அரசு கொண்டு வந்த அந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது” என்றார்

Views: - 519

0

1