நீட்டில் தேர்ச்சி பெற்றும் வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க ஆசை… பல லட்சத்தை பறிகொடுத்த மாணவி… கல்வி நிறுவன டிரஸ்ட் உரிமையாளர் கைது..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 5:02 pm

கரூர் : வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சீட் வாங்கித் தருவதாகக் கூறி கரூரில் ரூ 4.70 லட்சம் மோசடி செய்த கல்வி நிறுவன டிரஸ்ட் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கரூர் அடுத்த நரிகட்டியூரிலுள்ள தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி சித்ரா (60). இவரது மகள் ரசிகா. இவர் 12ம் வகுப்பு முடித்து விட்டு, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்க்கம் மற்றும் மதுரையில் கல்வி டிரஸ்ட் நடத்தி வருபவர் ரகுநாதபாண்டியன் (43). பேபி சித்ரா கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், காயத்ரி என்பவர் பேபி சித்ராவின் செல்போனுக்கு தொடர்புகொண்டு எம்பிபிஎஸ் படிப்பில் ரசிகாவை சேர்க்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

பங்களாதேஷில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான அங்கீகாரக் கடிதத்தை ரகுநாதபாண்டியன் வலைதளம் மூலம் அனுப்பியுள்ளார். அவரது அறக்கட்டளையிலிருந்து பேபி சித்ராவிடம் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பிறகு ரகுநாதபாண்டியன் ரசிகாவின் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பேபி சித்ராவின் கணவர், ரகுநாதபாண்டியனின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன் பிறகு ரகுநாதபாண்டியனை தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லை. அவர் ஏமாற்றிவிட்டதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ரகுநாத பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!